பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சூத்திரம்-சு) இறையனார் அகப்பொருள்

புடைத்து; தெருளானாயின், இவ்வாறு ஒழுகுதல் என்பதற்குச் சொல்லப்பட்டது.

இனி, ஒரு சாரார் சொல்லுவது :

'புணர்ந்த பின்றை' என்பது - இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தபின்றை என்றவாறு;
'ஆங்ஙனம் ஒழுகாது' என்பது - பாங்கனானானும் தமியாளை எதிர்ப்பட்டானும் புணராது,
தோழியை இரந்து பின்னிற்றற் கண்ணே முயலும் என்பாரும் உளர்.
அது பொருந்தாது;
என்னை காரணமெனின்,
தன் பாங்கன் தனக்குச் சிறந்த துணை, அவள் பாங்காய தோழி சிறக்குமாறு உண்டோ என்பதனான்.
அப்பொழுது அவளை நினையான், தன் பாங்கன் தனையே நினைக்கும் என்பது.

சூத்திரம் - 6


இரந்து குறையுறாது கிழவியுந் தோழியும்
ஒருங்கு தலைப்பெய்த செவ்வி நோக்கிப்
பதியும் பெயரும் பிறவும் வினாஅய்ப்
புதுவோன் போலப் பொருந்துபு கிளந்து
மதியுடம் படுத்தற்கும் உரிய னென்ப.

என்பது, என்னுதலிற்றோ எனின்,
மதியுடம்படுக்குந் திறம் இது என்பது உணர்த்துதல் நுதலிற்று.
மேற் சூத்திரத்தினோடு இயைபு என்னையோ எனின்,
மேல் பணிந்த மொழியால் தோழியை இரந்து பின்னிற்கும் எனப்பட்டது;
அங்ஙனம் இரந்து பின்னின்ற இடத்து, 'எத்திறத்துக்கொல்லோ இவனுடைய குறை' என்று ஐயப்பட்டு நிற்பதல்லது, இன்னதென்று உணராளன்றே!
உணராமையால், என் குறை இன்னது என்று அறிவித்து இரந்து பின்னிற்பென்' என்னும் கருத்தினால் இது செய்யும் என்பது இயைபு.

இதன் பொருள் :
இரந்து குறையுறாது என்பது - இரந்து வைத்துக் குறையுறவு தோன்றாமை என்றவாறு;
கிழவியும் தோழியும் என்பது -
கிழவி எனப்படுவாள் தலைமகள்,
தோழி எனப்படுவாள் செவிலித்தாய் மகள்,
என்னை, தோழி தானே செவிலி மகளே' (தொல் - களவியல். கூச.) என்றாராகலின்,
அவ்விருவரும்; ஒருங்கு என்பது - ஓரிடத்தராதல்;
தலைப்பெய்தல் என்பது - கூடியிருத்தல்;
செவ்வி நோக்கி என்பது அன்னதோர் பதநோக்கிச் சென்று நிற்றல் என்றவாறு.
அங்ஙனம் நிற்பாற்கு ஒருசொற்படுகால் முறைமை வேண்டும்;

இ. அ.-5