பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

இறையனார் அகப்பொருள்


‘வாசகம்' (பக்கம் : ௫௯) எனவும், பிறாண்டும் இந்நூன் முழுதும் பெருவரவிற்றான வடசொற்கள் பயின்றுவரக் காண்டலானும் ஐயமின்றித் தெளிய இடனாகின்றது. எனவே, நக்கீரனாரே இவ்வுரை கண்டார் எனத் துணிதற்கு நடுநின்ற நெஞ்சம் நடுங்கும். அவர் அருளிய ' திருமுருகாற்றுப்படை,' 'நெடுநல் வாடை' போன்ற தனி நால்களினும், மற்ற அகம், புறங்களில் இடம் பெற்றுள்ள தனிப்பாடல்களிலும் நூற்றிற்கு ஓரிரு விழுக்காடுகூட வேற்றுச் சொல்லில்லை. அனைத்தும் தனித் தமிழ் வளஞ் சான்ற தூய செந்தமிழ்ச் சொற்களே என்பதும் தெளிக.

இத்தகைய புலவர் பெருமான் 'மணிமிடை பவளம்' போல் தமிழிற் பிறசொற் பெய்து உரை வரையார். எவ்வாறோ இவ்வுரை அவர் பெயரால் நிலவுகின்றது.

நக்கீரரே உரை வகுத்ததாக இருப்பின், 'நக்கீரனாரால் உரை கண்டு' எனவும், 'என்று சொல்லினார் சான்றோர் ' எனவும் குறிப்பிடார்; குறிப்பிடுவது அவர் தம் சிறப்புக்குத் தற்புகழ்ச்சி யாகும். கோவைப் பாடல்கள் முற்கூறியவாறு அவர் காலத்து இல்லாதன. ஆகவே, பிற்காலத்து யாரோ உரையை ஒட்டி இயற்றிச் சேர்த்த துறைப்பாடலே என்று ஐயமின்றிக் கொள்ளலாம். அஃது, எவ்வாறாயினும் ஆகுக. உரையும் நூலும் சிறந்தன என்பது மட்டும் ஒருதலை.

இத்தகைய நூற் சிறப்பும், உரைச் சிறப்பும் கொண்டுள்ள இந்நூல், தமிழ்கூறு நல்லுலக மாந்தர்க்குக் கற்றுப் பயன்பெறும் திருநூலாக இலங்கி மிளிர்கின்றது. இந்நூல் இதற்கு முன் பலரால் திருத்தி வெளியிடப் பெற்றிருப்பினும் இப்பதிப்பு பல படிகளைக் கொண்டு பார்த்துச் செப்பனிட்டுச் சூத்திரங்களினும், மேற்கோட் செய்யுட்களினும் கடும்புணர்ப்புக்களைப் பிரித்துக் கற்பார் எளிதிற் பொருளுணர்ந்து கொள்ளுமாறு அமைத்து வெளியிட்டுள்ளோம். இதன் கண் அரும்பொருள் அகரவரிசையும் நால் இறுதியிற் சேர்த்துள்ளோம்.

இதன்கண் வரும் மேற்கோள் கலித்துறைப்பாடல்கள் ‘பாண்டிக்கோவை' என, வழங்கப்பெறுகின்றது. அதனைத் தனி நூலாக்கிப் பொருள் விளக்கத்துடன் விரைவில் வெளியிட முயன்றுள்ளோம்.

இவ்வரிய சீரிய நூலைத் தமிழுலகம் வாங்கிக் கற்றும் கற்பித் தும் பெரும்பயன் எய்துமென விழைகின்றோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.