பக்கம்:இறைவர் திருமகன்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

முகத்தில் விழிக்கக் கூட அப்பா விரும்ப மாட்டாரே' என்று தோன்றியது அவனுக்கு. நினைத்துப் பார்க்கப் பார்க்க அவனுக்குத் தன் தந்தையிடம் போவதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றியது.

“அப்பா, என்னை மன்னித்து விடுங்கள். செய்யக் கூடாத பாவத்தை நான் செய்து விட்டேன். இனித் தங்களுக்கு மகன் என்று சொல்லிக் கொள்ளக்கூட எனக்கு அருகதையில்லை. இருந்தாலும் என்னை மன்னித்து உங்கள் வேலைக்காரர்களில் ஒருவனாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வதென்று அவன் தீர்மானித்தான்.

தந்தையோ, வீட்டை விட்டு அவன் வெளியேறிச் சென்றதிலிருந்து அவன் நினைவாகவே இருந்தான். உலகம் அறியாத பிள்ளை எங்கே போய் எப்படித் துன்பப் படுகிறானோ என்று துடித்துக் கொண்டிருந்தான். என்றாவது தன் இளைய மகன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையோடு அவன் காத்திருந்தான். அடிக்கடி மகன் சென்ற திசையை நோக்கிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.