பக்கம்:இலக்கண வரலாறு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ix

காப்பியத்தை ஒரு தட்டிலும், ஏனைய நூல்களையெல்லாம் மற்றொரு தட்டிலும் வைத்துச் சீர்தூக்கினால், தொல்காப்பியத்தட்டே பொருட்பளுவால் தாழ்ந்து சிறக்கும் என்பது வெளிப்படை. ஆதலின் இவ்விலக்கண வரலாற்றில் தொல்காப்பியம் 130 பக்கங்கள் இடங்கொண்டிருப்பது உரிமையாகும்.

புலவர் இளங்குமரன் ஆழ்ந்த பலதுறைப் புலமையோடு தமிழ்ச்சொற்களின் வேர்களையும் வேரொப்புமைகளையும் கூர்ந்து ஆராயும் நுண்மதி பெற்றவர்; சிதறிக் கிடந்த நூற்பாக்களைத் தேடித் திரட்டிக் காக்கை பாடினியம் என்ற நூலை உருப்படியாக்கி, விரிந்த உரையும் வரைந்த இலக்கணப் பணியாளர். தமிழின் மொழியாற்றலை உறுதிப்படுத்தும் திறம் இவர் எழுத்தாண்மைக்கு உண்டு. உள்ளும் புறமும் ஒத்த தமிழ்த் தொண்டர் இவர். இலக்கண வரலாறு எனப்பெயரிய இந்நூற்கண், முந்து நூல், அகத்தியர், தொல்காப்பியர் சமயம், ஐந்திரம், இளம்பூரணர் சமயம், நச்சினார்க்கினியரின் மாட்டேறு, தெய்வச்சிலையாரின் உரைத்தன்மை, நாவலர் புத்துரை, குழந்தையுரையின் வைப்புக்கேடு என்ற பல அரில்களை எடுத்துக்காட்டி விளக்கியிருக்கக் காண்கின்றோம்.

'பிந்து நூல்களின் முந்து நூல்கள்' என்பது சுவையான அவலமான தலைப்பாகும். பாதி மறைந்தும் பாதி மறையாமலும் உள்ள அவிநயம் முதலான நூல்கள் இவ்வகையைச் சார்ந்தன. தொல்காப்பியத்தை அடுத்து இலக்கணிகளைக் கவர்ந்த நூல் நன்னூல் ஆதலின் இவ்வரலாறு அதற்குச் சிறப்பிடம் அளித்திருப்பது பொருத்தமே. உரைபெற்றது, உரைபெறாதது; பரவியது, பரவாதது; சிறப்பினது, சிறப்பிலது; யாப்பு வடிவினது, உரைவடிவினது; முழுமையது, குறையது என்ற பாகுபாடுபாராமல் எல்லா இலக்கண நூல்களையும் இவ்வரலாற்றில் தழுவியிருப்பது ஆசிரியரின் சமனிலைக்குச் சான்றாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/10&oldid=1465114" இலிருந்து மீள்விக்கப்பட்டது