பக்கம்:இலக்கண வரலாறு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

காலம் அதனின் முற்பட்டதென்றும், அந் நூற்றேர்ச்சி தொல்காப்பியர் பெற்றிருந்தார் என்றும், அந்நூற் பொருளைத் தம் நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஆய்வாளர் பலப்பல வகையால் விரிவுறக் கூறினர்.[1]

சிலப்பதிகாரத்தில் வரும் ‘விண்ணவர் கோமான்’ விழுநூல், ‘கப்பத்திந்திரன் காட்டிய நூல்’ என்பவற்றையும் ‘இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்’ என்னும் ஒரு நூற்பாவையும் காட்டி அவ்வைந்திர நூலைச் சுட்டுவர். விண்ணவர் கோமான் இந்திரன் வடமொழியில் நூல் செய்தான் எனின், தேவருலக மொழி வடமொழி என்றும், விண்ணுலக மொழியே மண்ணில் வடமொழியாய் வழங்குகின்றது என்றும் மண்ணவர் மொழியுடையாரை நம்பவைப்பதற்கு இட்டுக் கட்டப்பட்ட எளிய புனைவேயாம். அப்புனைவுப் பேச்சுக் கேட்டதால்தான் இளங்கோ தம் நூலுள்ளும் புனைந்தார். அவர் கூறும் “புண்ணிய சரவணத்தில் மூழ்கி எழுந்தால் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவர்” என்பதே நடைமுறைக் கொவ்வாப் புனைவு என்பதை வெளிப்படுத்தும். அகத்திய நூற்பாக்களென உலவ விட்டவர்களுக்கு, இந்திரன் எட்டாம் வேற்றுமை சொன்னதாக உலவவிட முடியாதா?

இவ்வாறு கூறப்பட்டனவே தொன்மங்களுக்குக் கைம் முதல். இதனைத் தெளிவாகத் தெரிந்தே தொல்காப்பியனார்,

" தொன்மை தானே
உரையொடு புணர்ந்த பழமை மேற்றே"


  1. 1. தமிழ் இலக்கிய வரலாறு கா. சு; தொல்காப்பிய ஆராய்ச்சி சி. சி; தமிழ் வரலாறு ரா.ரா; தொல்காப்பியம் க. வெ; இலக்கியச் சிந்தனைகள் ச. வை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/101&oldid=1471417" இலிருந்து மீள்விக்கப்பட்டது