பக்கம்:இலக்கண வரலாறு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

என்றார். தொன்மை என்பது வழிவழியாக உரைக்கப்பட்டு வந்த பழஞ்செய்தி பற்றியதாம் என்பது இந்நூற்பாவின் பொருள். இவ்வாறு தொல்காப்பியர் கேட்ட தொன்மச் செய்திகளைப் பனம்பாரனார் கேட்டிரார் என்ன இயலாதே.

“இந்திரனாற் செய்யப்பட்டதொரு நூல் உண்டு காண்; அது வடமொழியில் அமைந்தது காண்; அதன் வழிப்பட்டனவே வடமொழி இலக்கண நூல்கள் காண்” என்று கூறப்பட்ட செய்தியைப் பனம்பாரர் அறிந்தார். ‘அறிந்தார் என்பது இட்டுக் கட்டுவதோ’ எனின் அன்று என்பதை அவர்வாக்கே மெய்ப்பிப்பதை மேலே காண்க.

திருவள்ளுவர் காலத்திலும், “தாமரைக் கண்ணானின் உலக இன்பத்திலும் உயரின்பம் ஒன்று இல்லை” என்று பேசப்பட்டது. இவ்வாறு பிறர் பிறர் காலத்தும் பிறபிற செய்திகள் பேசப்பட்டன என்பவற்றை விரிப்பின் பெருகுமென்பதால் வள்ளுவர் அளவில் அமைவாம்.

திருவள்ளுவர் கேட்ட செய்தி, அவரை உந்தியது. அதனால் “தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிது கொல், தாமரைக் கண்ணான் உலகு?” என்றோர் வினாவை எழுப்பி இவ்வுலகத்தெய்தும் இன்பங்களுள் தலையாய காதலின்பத்தைச் சுட்டினார். இன்னதோர் வாய்பாட்டால் பனம்பாரனார் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரைச் சுட்டினார்.

‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று வாளா கூறினார் அல்லர் பனம்பாரனார். “மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்றார். அவர் கேள்வியுற்றது 'விண்ணுலக ஐந்திரம்!' அவ்விண்ணுலக ஐந்திரத்தினும் இம்மண்ணுலகத்துத் தொல்காப்பியமே சிறந்த ஐந்திரம் என்னும் எண்ணத்தை யூட்டிற்றுப் போலும்! “ஆகாயப்பூ நாறிற்று என்றுழிச் சூடக்கருது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/102&oldid=1471418" இலிருந்து மீள்விக்கப்பட்டது