பக்கம்:இலக்கண வரலாறு.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

மரபியலில் “தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன” என்னும் நூற்பாவை அடுத்துப் “பறழ் எனப் படினும் உறழாண் டில்லை” என்னும் நூற்பா அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறு அமைந்தால் எடுத்துக்காட்டு இல்லை என்பனவற்றுக்கு இலக்கியம் கிடைத்தல் இயல்பாக அமைகின்றது. “இக்காலத்து இறந்தன” என்னும் இடர்ப்பாடும் நீங்குகின்றது. இடப் பெயர்ச்சிக்கு இஃதொரு சான்று.

இடையியயில் “கொல்லே ஐயம்” என்பதை அடுத்த நூற்பா “எல்லே இலக்கம்” என்பது. இவ்வாறே இருசீர்நடை நூற்பா நூற்கும் இடத்தெல்லாம் அடுத்தும் இருசீர்நடை நூற்பா நூற்றுச் செல்லலும் பெரிதும் எதுகை மோனைத் தொடர்பு இயைத்தலும் தொல்காப்பியர் வழக்காதலைக் கண்டு கொள்க. இத்தகு இருசீர்நடை நூற்பாக்கள் இரண்டனை இயைத்து ஒரு நூற்பா வாக்கலும் தொல்காப்பிய மரபே.

“உருவுட் காகும்; புரை உயர் வாகும்”
“மல்லல் வளனே; ஏபெற் றாகும்”
“உகப்பே உயர்தல் உவப்பே உவகை”

என்பவற்றைக் காண்க. இவ்விருவகை மரபும் இன்றி

“நன்று பெரிதாகும்”

என்னும் நூற்பா ஒன்றும் தனித்து நிற்றல் விடுபாட்டுச் சான்றாகும்.

அகத்திணையியல் இரண்டாம் நூற்பா, ‘அவற்றுள்’ என்று சுட்டுதற்குத் தக்க சுட்டு முதற்கண் இன்மை காட்டி ஆங்கு விடுபாடுண்மை குறிப்பர். (தொல். அகத். உரைவளம். மு. அருணாசலம் பிள்ளை.)

இனி இடைச் செருகல் உண்டென்பதற்குத் தக்க சான்றுகளும் உள. அவற்றுள் மிகவாகக் கிடப்பது மரபியலிலேயேயாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/104&oldid=1471044" இலிருந்து மீள்விக்கப்பட்டது