பக்கம்:இலக்கண வரலாறு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

x


தமிழிலக்கண வரலாறு எழுதுவோர் அகத்தியம் தொடங்கி எழுதுவது ஒரு மரபாக வந்திருக்கின்றது. இது எனக்கு உடன்பாடன்று. தொல்காப்பியத்துக்கு முன்பு இலக்கண நூல்கள் பலவிருந்தன. இதில் ஐயமில்லை . ஆனால் அகத்தியம் என ஒரு நூல் இருந்தது. அதுவே முந்து நூல் எனப் பனம்பாரனாரால் சுட்டப்பட்டது என்ற வழிவழிக் கருத்துக்கு என்னானும் கரியில்லை. ஒப்பிலா மலடி என்றாங்கு, இல்லை என்று சொல்ல வேண்டிய ஒரு நூலுக்கு மகத்துவம் வாய்ந்த அகத்தியம் என்று பெயர் கூறித் தமிழிலக்கண வரலாற்றைப் புராண மயமாகத் தொடங்குவதைக் காட்டிலும், காலத்தை வென்று வாழும் தொன்மையான தொல்காப்பியத்தை முதலாவதாக வைத்து இவ்வரலாறு தொடங்கப்படுவதே அறிவுமுறை என்பது என் கருத்து.

தமிழிலக்கண நூல்கள் நூற்பாவும் உரையுமாக இருநூற்றுக்கு மேலாக இருந்தாலும், அற நூல்களில் திருக்குறள் போல, சில இலக்கண நூல்கள் தரமிக்கவை, அடிப்படையானவை, களஞ்சியச் செல்வமுடையவை, என்றும் குறிக்கொண்டு போற்றத்தக்கவை. தொல்காப்பியமும் அதன் தொல்லுரைகளும் ஒருபுறம் இருப்ப, நன்னூலும் அதன் உரைகளும் உரை விளக்கங்களும் இன்னொருபுறம் இருப்ப, ஏனையவற்றுள் வீரசோழியமும் யாப்பருங்கலவுரையும் நன்கு மதிக்கத்தக்கவை; ‘வடநூல் மரபும் புகன்று கொண்டே’ என்று வெளிப்படச் சொன்னபடி, வீரசோழியம் சொல்லாலும் பொருளமைதியாலும் வடமொழித் தாக்கம் உடையதாக இருந்தாலும், அதை இருமொழி ஒப்பிய நூல் என மதிக்கவேண்டும். இந்நோக்கில் அதன் வெற்றியைக் காண்பது நன்றாகும். பிரயோக விவேக நூலார் வன்கண்மையாகச் செய்தது போல், தமிழின் அடிப்படைகளைப் புத்த மித்திரனார் வடமொழிக்கு அடிமைப்படுத்தவில்லை. 'சார்ந்த வழக்கொடு தப்பா வடவெழுத்தைத் தவிர்ந்து தேர்ந்துணர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/11&oldid=1480807" இலிருந்து மீள்விக்கப்பட்டது