பக்கம்:இலக்கண வரலாறு.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

பிறரும் உரை வரைந்து நூலைப் பொருளுடன் காத்த பின்னரும் அஃதறிஞரும் அறியா நிலையில் இருந்தது என்றால், இளம்பூரணர் உரை வரைதலை மேற்கொள்ளாதிருந்திருந்தால் தொல்காப்பியத்தின் நிலைமை என்ன ஆகியிருக்கும், என்பதே! தொல், பொருள், இளம்பூரணத்தை 1920 இல் வெளியிட்ட சா. நமச்சிவாய முதலியார் 1924இல் தொல். பொருள், மூலத்தை முதற்கண் வெளியிட்டுள்ளார். உரையொடு கூடிய மூலத்தில் இருந்து தனியே மூலத்தைப் பெயர்த்துப் பதிப்பித்த பதிப்பே மூலப்பதிப்பு என்பதை எண்ணிப் பார்த்தால், நாம் இளம்பூரணர்க்குப் பட்டுள்ள நன்றிக் கடனுக்கு அளவுண்டோ ? இவர்தம் உரைச்சுவடி இல்லாக்கால், மற்றையர் உரைவரையும் வாய்ப்பும் ஏற்பட்டிராதே! தொல்காப்பியம் நமக்குக் கிட்டியமை இளம்பூரணர் உரைக்கொண்ட நலத்தாலேயே என்பதை எண்ணும் போதே இவர் தொண்டு மலை விளக்கென இலங்குவதாம்.

இளம்பூரணர்:

இளம்பூரணர் என்னும் பெயரால், இவர் இளமையிலேயே முழுதறிவு பெற்றுச் சிறந்தமை கண்ட சான்றோர் இச்சிறப்புப் பெயரால் இவரை வழங்கினர் என்பது விளங்கும். இஃதவர் இயற்பெயராக இருத்தற்கு இயலாது. கண்ணகியார் ‘சிறுமுதுக்குறைவி’ எனப் பட்டதும், நம்மாழ்வார் ‘சிறுப்பெரியார்’ எனப்பட்டதும் அறிவார் இதனைத் தெளிவார்.

‘இளங்கோ வேந்தர்’ ‘இளங்கோவடிகளா’ராகப் பெயர் பெற்றமைபோல் இளம்பூரணரும் தம் துறவினால் ‘இளம்பூரணவடிகளார்’ எனப்பட்டார் என்பது விளங்குகின்றது.

இவர் துறவோர் என்பதை நமக்கு வெளிப்படக் கூறுபவர் நன்னூல் முதலுரையாசிரியர் மயிலைநாதர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/112&oldid=1471428" இலிருந்து மீள்விக்கப்பட்டது