பக்கம்:இலக்கண வரலாறு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அவர் எச்சங்களின் வகையை எடுத்துக் காட்டுங்கால் (359) இளம்பூரணர் உரையை உரைத்து “இஃது ஒல்காப் புலமைத் தொல்காப்பியத்துள் உளங்கூர் கேள்வி இளம்பூரணரென்னும் ஏதமில் மாதவர் ஓதியவுரையென்றுணர்க” என்கிறார்.

இதில் இளம்பூரணரை ‘ஏதமில் மாதவர்’ என்ற செய்தி இவர் துறவோர் என்பதைக் காட்டும் புறச்சான்றாம். அகச்சான்று உண்டோ எனின் உண்டு என்பது மறுமொழியாம்.

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப

என்னும் நூற்பா அசுத்திணையின் முதற்கண் உள்ளது. இதில் அகத்திணை ஏழும் முறை பெற நிற்கும் வகையைக் கூறுகிறார் ஆசிரியர். இதற்கு உரை விளக்கம் வரையும் இளம்பூரணர், “இந்நூலகத்து ஒருவனும் ஒருத்தியும் நுகரும் காமத்திற்குக் குலனும் குணனும் செல்வமும் ஒழுக்கமும் இளமையும் அன்பும் ஒருங்கு உளவழி இன்பம் உளதாம் எனவும், கைக்கிளை ஒரு தலை வேட்கை எனவும், பெருந்திணை ஒவ்வாக் கூட்டமாய் இன்பம் பயத்தல் அரிது எனவும் கூறுதலான் “இந்நூலுடையார் காமத்துப் பயனின்மை உய்த்துணர வைத்தவாறு அறிந்து கொள்க” என்கிறார்.

‘காமம் நீத்தபால்’, ‘கட்டில் நீத்தபால்’, ‘தாபத நிலை’ ‘தபுதார நிலை’, ‘சிறந்தது பயிற்றல் ‘இறந்ததன் பயன்’ எனவரும் இடங்களில் இத்தகு கருத்து உரைக்கப் பெறின் பருந்தும் நிழலுமென நூலாசிரியர் சொல்லொடு பொருள் பொருத்திச் செல்வதாகக் கொள்ள வாய்க்கும். இவ்விடத்தில் அக்குறிப்பு இல்லையாகவும் ‘இந்நூலுடையார் காமத்துப் பயனின்மை உய்த்துணர வைத்தவாறு’ என்பது இளம்பூரணர் உட்கோளேயாம் என்பது வெளிப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/113&oldid=1471429" இலிருந்து மீள்விக்கப்பட்டது