பக்கம்:இலக்கண வரலாறு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

தன்தோள் நான்கின் எனவரும் பாடலை இளம்பூரணர் மேற்கோள் காட்டுகிறார் (தொ. பொ. 50). இதனைச் சேனாவரையர் தம் நூலில் முதற்காப்புப் பாடலாக அமைத்துக் கொள்கிறார். இதனால் இவர் சிவச் சார்பினர் எனின், சேனாவரையர் போலவே தாமும் காப்புச் செய்யுளாக வைத்திருப்பார். சேனாவரையர் சிவநெறியர் என்பதற்கு இது சான்றாமேயன்றி இளம்பூரணரைச் சாராதாம் என்க.

“இசை திரிந்திசைப்பினும்” என்னும் பொருளியல் முதல் நூற்பா உரையில் மேற்கோளாகக் “கார்விரி கொன்றை” என்னும் அகநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலைக் காட்டும் இளம்பூரணர், ‘சிவானுபூதியிற் பேருலகம் தங்கிற்று’ என்று உரையெழுதுவது கொண்டு இவரைச் சிவநெறியர் என உறுதிப்படுத்துவர். அஃதாயின், அப்பாடல் தொடரொடு தொடர்பிலாத அச்செறிப்பும், ‘தாவில் தாள் நிழல்’ என்பதன் பொருள் விடுப்பும் கொண்டு ஐயுறவு கொள்ளற்கு இடமுண்டு! பாடல் தொடரையே இசைத்துத் தொடர்புறுத்தும் அவ்வுரையில் அஃதொன்று மட்டும் ஓட்டா ஒட்டாக இருத்தலும், தாவில்தாள் நிழல் விடுபாடும் பிறிதொருவர் கைச்சரக்கோ என எண்ணவே வைக்கின்றது.

இளம்பூரணர் வள்ளுவர் வாய்மையில் நெஞ்சம் பறி கொடுத்த தோன்றல் என்பது இவர் எடுத்துக்காட்டும் மேற்கோள் விளக்கப் பெருக்கத்தானே நன்கு புலப்படும். அதிகாரங்கள் பலவற்றை அடுக்கிக் கூறுதலாலும் விளங்கும். இத்தகையர் வள்ளுவரைப்போலச் சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத சமனிலைச் சால்பினர் என்பதே தெளிவாம். சமயச் சார்பினர் வெளிப்படக் காட்டும் வலித்த பொருளாட்சி, மேற்கோள் ஆயவை அவரிடத்துக் காணற்கில்லாமல் எச்சமயமும் ஒப்ப நினைத்துப் போற்றும் ஒரு பெருந்தகைமையே காணப்படுகின்றது என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/119&oldid=1471434" இலிருந்து மீள்விக்கப்பட்டது