பக்கம்:இலக்கண வரலாறு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xi

வார்க்கும் இனிமையைத் தந்து' என்ற காரிகையால் வீரசோழியத்தின் தமிழ்க்காப்பு தெளிவாகும்.

தமிழிலக்கணச் செல்வங்களுள் யாப்பருங்கலவுரைக்கு ஈடிணையில்லை. இறையனாரகப்பொருள் நூல் அதன் உரையால் மன்னியதுபோல, யாப்பருங்கலமும் அதன் பேருரையால் மன்னலாயிற்று. எத்துணையோ இலக்கண நூல்கள் மறைந்தொழியிலனும் அந்த இழப்புக்கெல்லாம் ஈடு செய்யவல்லதாக இக்கலத்தின் உரை விளங்குகின்றது. இவ்வுரை கல்லாதவன் தமிழிலக்கண வாயில் நுழையாதவன். இந்த உரை நூல் கிடைத்திராவிட்டால் தமிழிலக்கண வரலாறு விரிவாக எழுதமுடியுமா? இலக்கணக் கொள்கைகள் தொடைவிடையாட முடியுமா? மறைந்துபோன இலக்கணங்களேயன்றி இலக்கியப் பெயர்களும் செய்யுட்களும் ஒளிப்பட்டிருக்குமா? எவ்வளவு வரலாற்றுக் குறிப்புக்கள், இசைப்பாடல்கள், யாப்பு வழக்குகள், நாட்டுப்பாடல்கள் இவ்வுரையில் கொட்டிக் கிடக்கின்றன! 'அறிதோறு அறியாமை கண்டற்றால்' என்ற கருத்து இவ்வுரையைக் கற்குங்கால் தெரியவரும். இத்தகைய பெறலரும் உரை பன்னோக்கில் இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. இது நம் ஆய்வுப் போக்கின் நடுக்கத்தையும் நொசிவையும் வெளிப்படுத்துகின்றது.

புதிய தமிழுக்கு ஆக்கமும் நல்ல நூலாளர்க்கு ஊக்கமும் வழங்கி, மொழித் தொண்டாற்றி முன்னணியில் நிற்கும் மணிவாசகர் நூலகம் இலக்கண வரலாறுபோலும் தகுதி வாய்ந்த நூல் வரிசைகளைத் தொடர்த்து பதிப்பித்துப் பல் புகழ் பெறுக என வழுத்துகின்றேன்.

௩ ஆனி ௨௲௧௯
17-6-1988
வ. சுப. மாணிக்கம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/12&oldid=1480808" இலிருந்து மீள்விக்கப்பட்டது