பக்கம்:இலக்கண வரலாறு.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

வேற்றுமைக்கண் அடக்கல் ஆண்டு எல்லார்க்கும் ஒப்ப முடிந்த தன்று’ என்பதால் (74) புலப்படும்.

சேனாவரையரின் கல்வி யாழத்தையும் உரைச் செறிவையும் நூன்முழுவதும் கண்டு மகிழ்வார், அவர்தம் பண்புச் செறிவையும் ஓரிடத்தில் அறிய வாய்க்கின்றது. அது,

“வினைச் சொற் காலமுணர்த்துங்காற் சில நெறிப்பாடுடைய வென்பது விளக்கிய, ‘நெறிப்படத் தோன்றி’ என்றார். நெறிப்பாடாவது அவ்வீற்று மிசை நிற்கும் எழுத்து வேறுபாடு, அவை முற்ற உணர்த்தலாகாவா யினும், அவ்வீறுணர்த்தும் வழிச் சிறிய சொல்லுதும்" என்பதாம் (201).

‘உரையாசிரியர்க்கு அது கருத்தன்று’ என்று கூறும் அளவில் நாம் அமைகின்ற நிலையும், ‘போலியுரை’ என்று கூறும் இடங்களிலெல்லாம் நாம் அடைகின்ற புண்பாடும், ‘முற்ற உணர்த்தலாகாவாயினும், சிறிது சொல்லுதும்’ என்பதைக் காணும்போது மாறி ஒரு மயக்க நிலைக்கு ஆட்படுகின்றோம். தாம் காணும் உண்மைப் பொருள் காட்டலில் சேனாவரையாக்குள்ள தணியா வேட்கையே ‘போலிக் காய்வை’ உண்டாக்கிற்றுப் போலும் என அமைகின்றோம்!

இ. பேராசிரியம்

தொல்காப்பியப் பின்னான்கு இயல்களுக்குப் பேராசிரியர் உரை கிடைத்துள்ளது. பேராசிரியர் என்பது சிறப்புப் பெயர் என்பது வெளிப்படை. அவர் இயற் பெயர் தெரிந்திலது.

பேராசிரியர் பலர்:

சிறப்புப் பெயர் இயற்பெயருக்கு முன்னர் வருதல் வேண்டும் என இலக்கணம் கண்டது தொல்காப்பியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/146&oldid=1471505" இலிருந்து மீள்விக்கப்பட்டது