பக்கம்:இலக்கண வரலாறு.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117

117

என்னும் வெண்பாவுரைக்குமாறு தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சிந்தாமணி ஆகியவற்றுக்கு நச்சினார்க்கினியர் வரைந்த உரை நமக்கு வாய்த்துள்ளது. குறுந்தொகைக்குப் பேராசிரியர் வரைந்த உரை அகப்படாமை போலவே நச்சினார்க்கினியர் வரைந்த 20பாடல்களின் உரையும் அகப்பட்டிலது. தொல்காப்பியம் முழுவதற்கும் உரைகண்டிருப்பினும் பொருளதிகாரத்திலுள்ள மெய்ப்பாட்டியல், உவமையியல், மரபியல் ஆகிய மூன்றியல்களுக்கும் உரை கிடைத்திலது.

‘பாரத்தொல் காப்பியம்’ என்னும் வெண்பா நச்சினார்க்கினியர் உரையை ‘விருத்தி’ என்று கூறியிருப்பினும் தொல்காப்பியத்தில் காண்டிகை உரை என்னும் குறிப்பே உள்ளது. பத்துப்பாட்டு கலித்தொகை ஆகியவற்றிலும் * விருத்தி' என்னும் குறிப்பு இல்லை. ஆதலால் இவ் வெண்பாப் பாடியவர் விருத்தி என்று கருதினார் என்று கொள்ளலாம். நச்சினார்க்கினியர் கருத்து அஃதன்று என்றும் கொள்ளலாம்.

பெயரும் குடிவழியும்

நச்சினார்க்கு (விரும்பினார்க்கு) இனியர் என்பது இறைவன் பெயர்களுள் ஒன்று என்பர்.

“நச்சுவார்க் கினியர் போலும் நாகவீச் சரவ னாரே”

என்பது அப்பரடிகள் தேவாரம் (4.66 1). இதில் பெயராக வந்திலது. இறைவன் இயலாகவே வந்துளது என்பது எண்ணத்தக்கது. அப்பரடிகளுக்குக் காலத்தால் மிகப்பிற்பட்ட சிவஞானமுனிவரர், “நச்சினார்க்கினியாய் போற்றி” என்றதும் இயல்விளிப் பெயரேயாம். பெயரன்று என்பதறிக. இவற்றால் இவர் இயற்பெயர் வேறொன்றாக இருந்து இவர்தம் உரைச் சிறப்பறிந்தவர்கள் இப்பெயரை வழங்கியிருத்தல் வேண்டும். அதுவே இயற்பெயர்போல அமைந்து விட்டது எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/162&oldid=1471521" இலிருந்து மீள்விக்கப்பட்டது