பக்கம்:இலக்கண வரலாறு.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

உ. கல்லாடம்

தொல்காப்பியத்திற்கு உரைகண்டாருள் ஒருவர் கல்லாடனார். இவர் சொல்லதிகாரத்திற்கு உரை கண்டுள்ளார். அவ்வுரையும் இடையியல் பத்தாம் நூற்பா உரை தொட்ட அளவிலேயே கிட்டியுள்ளது. எஞ்சியவை கிட்டிற்றில்லை. இவர் “ஒல்காப் புலமைத் தொல்காப்பியத்திற்கு உரையிடையிட்ட விரகர் கல்லாடர்” என்று பாராட்டப்படுகிறார். கல்லாடம் என்பது பாண்டி நாட்டகத்ததோர் ஊர் என்பது மணிவாசகர் வாக்கால் அறிய வாய்க்கின்றது. “கல்லாடத்தினில் கலந்தினி தருளி” என்கிறது அது. அக் கல்லாடத்துப் பிறந்ததனாலோ, முந்தையோர் பெயர் வழி வந்தமையாலோ கல்லாடர் என்னும் பெயர் பெற்றார் எனலாம்.

பெயர்

கல்லாடர் என்னும் பெயரால் அறியப் பெறுவார் நால்வருளர். அவருள், சங்க நூல்களால் அறியப்பெறும் கல்லாடர் ஒருவர். அவரே, பாப்பருங்கல விருத்தியுடையாரால் கபிலர் பரணர் கல்லாடர் மாமூலர் என எண்ணப்படும் வரிசையுடையவர். மற்றொருவர், கல்லாடம் எனப்படும் அகப்பொருள் நூல் அருளியவர். இவ்விருவரினும் வேறொருவரே, தொல்காப்பிய உரையாளர் கல்லாடர். இனித் திருவள்ளுவமாலைக் கல்லாடரோ எனின், பெயர் சூட்டும் அளவில் ஒருவர் இட்டமைத்ததே அப்பெயர் என்க.

காலம்

இக் கல்லாடர் தொல்காப்பிய உரையாசிரியர்களுள் தெய்வச் சிலையார்க்கும் பழைய உரையாசிரியர்க்கும் முற்படவும், மற்றையோர்க்கெல்லாம் பிற்படவும் இருந்தவர் என்பது விளங்குகின்றது. “பெண்மை அடுத்த மகனென்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/175&oldid=1471536" இலிருந்து மீள்விக்கப்பட்டது