பக்கம்:இலக்கண வரலாறு.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

என்பது பெருவழக்கிற்று ஆகலின் அவற்றுள்ளும் முன்வைக்கப்பட்டது (230) என்பது முதலாகக் கூறுவதும் பிறிது பிறிது இடங்களில் இவ்வாறே விரித்துரைப்பதும் ஆசிரியர் வைப்புமுறைச் சிறப்பை வெளிப்படுத்துவனவாம்.

ஒரு சூத்திரப் பொருளை வேறொரு சூத்திரத்தால் பெற வாய்ப்பிருந்தும் ஆசிரியர் மீண்டும் கூறுதலைக் கூறியது கூறலாகக் குறை காணாமல், “மாணாக்கனை நன்கு தெளிவித்தற் பொருட்டுக் கூறினார்” என நிறையாக்குகின்றார் (117).

சில இடங்களில் இவர் உரைக்கும் வேறுபாடுகள் சுவையானவை. ‘பொற்றொடி’ என்பதை இரு பெயரொட்டுக்கு எடுத்துக்காட்டும் இவர் “இஃது அன்மொழித் தொகையன்றோ எனின், படுத்தலோசை பட்டவழி அன்மொழித் தொகையாம்; எடுத்தலோசை பட்டவழி ஆகுபெயராகும்” என்கிறார்.

காலங்குறித்த பல்லோர் மதங்களைத் திரட்டிக்கூறும் இவர், “காலம் தன்னை மூன்று என்பாரும் தொழிலாவது பொருளினது புடைபெயர்ச்சியாகலின் அஃது ஒரு கணம் நிற்பதல்லது இரண்டு கணம் நில்லாமையின் நிகழ்ச்சி என்பதொன்று இல்லை; ஆதலின், இறப்பும் எதிர்வும் எனக்காலம் இரண்டே என்பாரும், நிகழ்காலம் என்ற ஒன்றுமே உண்டு என்பாரும் எனப்பல மதம் உண்டு என்பது அறிவிக்கப்பட்டது” என்பது தம் உரையைக் கற்பார் பல்லோர் உரைகற்ற பயனை அடைய வேண்டும் என்னும் எண்ணத்துடன் எழுதினார் என்பது புலப்படுகின்றது.

ஊ. தெய்வச்சிலையம்

தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு உரைகண்டாருள் ஒருவர் தெய்வச் சிலையார். அவருரை சொல்லதிகாரம் முழுமைக்கும் கிடைத்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/179&oldid=1471478" இலிருந்து மீள்விக்கப்பட்டது