பக்கம்:இலக்கண வரலாறு.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

138

வாரை நோக்குதலினாலும் இலக்கணம் இன்றியும் பாகம் உணர்வார் ஆகலானும் எடுத்து ஓதாராயினர். அஃது அற்றாதல், ‘வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொன் மேன’ என ஓதிய அதனானும் கொள்க. சொன்மை நிலை இலக்கணம் இல்வழி உணர்வரிது ஆதலான் எடுத்து ஓதப்பட்டது” (155) என்கிறார். இத்தகையவை ஆசிரியர் சிறப்பியல் காட்டுவனவாம்.

உவமை

“வலனாக என்னும் எச்சத்துக்கண் ஆக என்பது செய்யுள் விகாரத்தால் தொக்கு நின்றது. தொக்கு நின்ற காலத்தும் அதற்கு இயல்பு முற்பட்ட நிலையை என்று கொள்க. என்போலவோ எனின், வாலும் செவியும் இழந்த ஞமலியைப் பின்னும் ஞமலி என்றே வழங்கினாற் போல” எனச் சுவைமிக்க வகையில் உவமைப் படுத்துகின்றார் (408). பூத்தொடையொடு சொற்றொடையையும் விரிய விளக்குகின்றார் (408).

“எழுத்துப் பிரிந்திசைத்தல் இவணியல் பின்றே” என்பதன் உரையில் இத்தமிழகத்தில் இல்லை என்கிறார் (391).

தமிழ்நாடு

செந்தமிழ் நாட்டு எல்லை குறித்து இவர் கூறும் கருத்து பிறரிலும் தெளிவும் திருத்தமும் உடையதாம். பிறருரைகள் சோழ நாடே செந்தமிழ்நாடு என்பது சொல்ல இவர், “செந்தமிழ் நாடாவது வையையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணம் காணாமையாலும் வையையாற்றின் தெற்காகிய கொற்கையும் கருவூரின் மேற்காகிய கொடுங்கோளுரும் மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ் திரி நிலமாதல் வேண்டுமாதலானும் அஃது உரையன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/183&oldid=1471550" இலிருந்து மீள்விக்கப்பட்டது