பக்கம்:இலக்கண வரலாறு.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

காட்டுவது கொண்டும் ‘முதலாவது கிளவியாக்க உதாரணம் முற்றும்’ ‘வேற்றுமையியல் உதாரணம் முற்றும்’ என்று வருவது கொண்டும் துணியலாம். சிறப்பினாகிய பெயர் நிலைக்கிளவிக்குப் பதினைத்து எடுத்துக் காட்டுகள் காட்டியுள்ளார் (41).

நூலாசிரியர் நூற்பா நூற்றற் சிறப்பைப் போற்றிக் கொள்வதில் இவ்வுரையாசிரியர் பிறர்க்குக் குறைந்தாரல்லர் என்பதை, “அவ்விரண்டு பொருட்கும் (கண், தேவகை) வேறோர் சூத்திரம் செய்யாது இவ்வுருபு களுடனே ஓதினர் சூத்திரம் சுருங்குதற்கு” என்பதால் உணர்த்துகின்றார் (83).

தெளிவு

கற்பார் மயக்கம் நீக்கவேண்டும் கருத்துடையர் இவர் என்பதை, 'மும்முழங்கையரைப்போல ஓக்கமும், அதற்குத் தக்க பிழம்பும் மம்மர் மாலைப்பொழுதும் கண்டு ஐயுற்றான், குற்றி கொல்லோ மகன் கொல்லோ தோன்றுகின்ற உரு என்று இருதிணைக்கும் பொதுவாகச் சொல்லுக” என்பதால் வெளிப்படுத்துகிறார் (24). உயரம், தோற்றம், பொழுது இவற்றைச் சுட்டி மயங்குதற் சூழலை இவர் காட்டுதல்போல் பிறர் காட்டினார் அல்லர் என்க.

எத்துணையோ பேரிழப்புகளுக்கு ஆட்பட்ட தமிழுக்கு இவ்வுரைக் குறையும் ஓரிழப்பு!

ஏ. தொல்காப்பியச் சூத்திர விருத்தி

இந்நூல் தொல்காப்பியப் பாயிர விருத்தி, முதற் சூத்திர விருத்தி என இரண்டு பகுப்புடையதாய் 86 பக்க அளவில் அமைந்துள்ளது. இதனை இயற்றியவர் மாதவச் சிவஞான முனிவரர். இவர் திருவாவடுதுறைத் திருமட அடியவர். பதினெட்டாம் நூற்றாண்டினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/193&oldid=1471578" இலிருந்து மீள்விக்கப்பட்டது