பக்கம்:இலக்கண வரலாறு.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156


நாவலர் புத்துரை ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் தொல்காப்பிய உரைகளால் கப்பிக்கிடந்த மாசுகள் சிலவற்றை நீக்குவதற்கும், புதிய கண்ணோட்டத்தில் அந் நூலை நோக்குதற்கும் வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது. தமிழியல் நோக்கில் தொல்காப்பியரை நோக்குமாறு தம் உரையால் நிலைநாட்டிய நாவலர் பாரதியார் பின்னே வந்த பலர்க்கு வழிகாட்டியாக அமைந்தமை நினைவு கூரத்தக்கது.

பாரதியார் தமிழ்ப் பார்வையைக் கண்டு ‘தகும்’ எனக் கொள்ளும் நாம், அவர் தக்க நூற்சான்றின்றிப் “பாடம் இவ்வாறு இருந்திருக்கும்; பின்னே மாறியிருக்க வேண்டும்” என்று திட்டப்படுத்தி உரைகாலும் நெறி நூன்முறையன்று எனல் முறை. அதற்கு எடுத்துக்காட்டு ‘கந்தழி’ என்பதைக் ‘காந்தள்’ எனக் கொண்டதாம்.

நாவலர் பாரதியாரின் அகத்திணையுரை 1942-இல் வெளிவந்தது. மற்றையவை அதன் பின்னர் வெளி வந்தன.

பாரதியார், வ.உ. சிதம்பரனார், அரசஞ் சண்முகனார், பண்டிதமணி ஆகியோரிடம் நாவலர் பாரதியார் தொடர்பும் நெருக்கமும் கொண்டிருந்தவர். எம்.ஏ; எம்.எல்; பட்டங்களைப் பெற்றவர். சிறந்த வழக்கறிஞராக விளங்கிய இவர், சிறந்த தமிழாய்வாளராகவும், நாவன்மை மிக்கவராகவும் விளங்கினார். தொல்காப்பிய உரையை அன்றி, சேரர் பேரூர், சேரவேந்தர் தாயமுறை, திருவள்ளுவர், தசரதன் குறையும் கைகேயி நிறையும், மாரிவாயில் முதலிய நூல்களை இயற்றினார்.

எட்டையாபுரத்தினராகிய இவர் மதுரைப் பசுமலையில் வாழ்ந்தார். தமிழகப் புலவர் குழுவின் முதல் தலைவராக விளங்கினார். அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆய்வுத்துறைத் தலைவராகச் சிறந்தார். இவர் நாவலர், கணக்காயர், டாக்டர் என்னும் பட்டங்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/201&oldid=1471608" இலிருந்து மீள்விக்கப்பட்டது