பக்கம்:இலக்கண வரலாறு.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169

இக்கருத்தில் மாறுபாடில்லை என்பதும் அக்கட்டுரைகளால் அறிய வருகின்றன.

இறை என்பது உயர்வு, தங்குதல், இறைப்பு, ஏவல், வரி, மறுமொழி எனப் பல பொருள் தரும் ஒரு சொல். இறை என்பது அரசன், இறைவன் என்னும் பொருள் தருதலும் பழமையானதே. ஆனால் இறையன் என்பது அப்பொருள்களில் வந்திலது; உயர்ந்தோன் என்னும் பொதுப் பொருள்தரும் பெயராய் நிற்கின்றது எனலாம். துறையன் என்பது கடற்கரைத் தலைவனையும், துணைவன் என்பது கணவனையும் சிறப்பு நிலையில் குறித்தலையும், துறையன், துணையன் என்பவை துறைக்கண் இருப்பான் எவனையும், துணையாக இருப்பான் எவனையும் குறித்தலையும் அறிக.

இனி 'இறை' என்பதற்குரிய ஒரு பொருள் வழக்கில் வீழ்ந்து விட்டதோ என எண்ண வேண்டியுள்ளது. இடைச்சந்தில் தந்து இறுக்கி உயர்த்திக் கட்டும் மான மறையாம் துணியுடை 'குறியிறை' என வழங்கப் பட்டமை அறிய வருகின்றது. சிறுவர்களைக் குறிக்கும் 'குறியிறைப் புதல்வர்' என்பது பழைய ஆட்சி. அண்மைக் காலம் வரையில் இக்காட்சி காணத் தக்கதாகவே இருந்தது. இப்பொழுதும் நாட்டுப்புறங்களில் உழவு முதலிய தொழில் புரியும் ஆடவர் பயன்படுத்துதல் கண்கூடு. 'நீர்த்துணி' 'குளி சீலை' ‘தாய்ச்சீலை’ (கோமணம், கௌசணம், கச்சணம்) என வழங்கப்படும் அது, குளிப்புடையாகப் பயன்பட்டு வருதலும் நடைமுறை. முற்றுந் துறந்த பட்டினத்தார் அடிகளும், பின்னாளை வண்ணச் சரபம் தண்டபாணி அடிகளும் குறியிறையராக அவர்கள் படங்களின் வழியே அறிய முடிகின்றது. ‘உடை கோவணம்’ எனத் துறவோர் உடை சொல்லப்படுதல் வழக்கே. பற்றின்மைச் சான்றொடு, மானமறை நாட்டம் காட்டும் மறை ‘குறியிறை’ எனத் தெளிந்தால், அத்தகு துறவோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/214&oldid=1472497" இலிருந்து மீள்விக்கப்பட்டது