பக்கம்:இலக்கண வரலாறு.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உளத்து என்று கொள்ளினும் அமையும் என்று இவர் கூறுவது வலிந்த ஆட்சி எனினும் இனிய இரட்டுறல் சுவை கண்டு மொழிவதாய் அமைகின்றது.

நூலாசிரியர் ‘கந்தருவம்’ என ஒரோ ஒரு வட சொல்லை மட்டுமே நூலில் ஆட்சி செய்தாராக இவ்வுரையாசிரியர் சனநீக்கம், சுவர்க்கம், தந்திரம், புனருத்தம், சமவாயம், பிராயச்சித்தம், புத்திரலாபம், அவத்தம், அருத்தாபத்தி, ஆபதம் இன்ன பல வடசொற்களைப் பயிலவழங்குகிறார்.

சொல்லாட்சி

அடைமுண்டு, முட்டு என்று வழங்குவதை ‘வழியடை’ என அழகாக வழங்கியுள்ளார். கொத்துமல்லி என்பதை உருளரிசி கொத்த மூரி என்கிறார். வெந்நீருடன் கலக்கும் தண்ணீரை ‘வளாவு நீர்’ என வழக்குணர்ந்து பயன்படுத்துகிறார். ஊடலைச் சிவப்பு என அருமையாய்ப் போற்றுகிறார். அன்றன்று, (அன்றையன்றை) என்பதை அற்றைக் கன்று எனப் பயன்படுத்துகிறார். இவர்தம் அம்பல் அலர் விளக்கம் அருமை மிக்கது (22). பொருள்கோள் விளக்கம் தனிச்சிறப்பினது (56).

நூலால் உரையும் உரையால் நூலும் ஒன்றை ஒன்று ஒப்பச் சிறப்புறும் என்பதற்கு இறையனார் களவியல் உரை சீரிய எடுத்துக் காட்டாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/225&oldid=1472521" இலிருந்து மீள்விக்கப்பட்டது