பக்கம்:இலக்கண வரலாறு.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

எனவரும் மயிலைநாத ருரையால் அறியப்படும் (நன். பொது. 9).

அவிநயப்புறனடை

மயிலைநாதர் உரையாலும் யாப்பருங்கல விருத்தி யுரையாலும் ‘நாலடி நாற்பது’ என்னும் அவிநயப் புறனடை நூல் ஒன்று இருந்ததென அறியவாய்க்கின்றது. அதுவெண்பாயாப்பான் இயன்றது என்பதும் காட்டப் பட்டுள்ள மேற்கோள்களால் அறிய முடிகின்றது.

ஓராசிரியர் இயற்றிய ஒரு நூலின் மேல் நூலாக வரும் ஒரு நூல் ‘புறனடை’ எனப்படுதல் வழக்கு. யாப்பருங்கலத்திற்குப் பின்னர் அதன் ஆசிரியர் அமித சாகரரால் இயற்றப்பட்ட யாப்பருங்கலக்காரிகை யாப்பருங்கலப் புறனடை என வழங்கப்படுதல் அறியத்தக்கது. அவ்வாறே அவிநயர் இயற்றிய ‘நாலடி நாற்பது’ அவிநயப் புறனடை என வழங்கப்பட்டதென்க.

“நாலசைச்சீர் வெண்பாவில் நண்ணா அயற்பாவில்
நாலைச்சீர் நேரீற்று நாலிரண்டாம் - நாலசைச்சீர்
ஈறுநிரை சேரில் இருநான்கும் வஞ்சிக்கே
கூறினார் தொல்லோர் குறித்து”

என்பது அவிநயப் புறனடையாக யாப்பருங்கல விருத்தியுள் அறியப்படும் வெண்பாக்களுள் ஒன்று (15).

சில வேறுபாடுகள்

யாப்பிலக்கணத்திற்கு அமைந்த எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பாவகை இவற்றைக்கூறும் அவிநயர் தாழிசை துறை விருத்தம் என்னும் பாவினங்களையும் கூறியுள்ளார். வண்ணங்கள் இருபது எனத் தொல்காப்பியனார் கூறினாராக இவர் நூறாகப் பெருக்கிக் கொள்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/229&oldid=1472525" இலிருந்து மீள்விக்கப்பட்டது