பக்கம்:இலக்கண வரலாறு.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

னியார்” என்பார் (தொல். செய். 1). யாப்பருங்கல விருத்தியுடையார் காக்கை பாடினியார் நூற்பாவுக்குப் பின்னரே இவர் நூற்பாவை மேற்கோள் காட்டும் வரன்முறை மேற்கொண்டிருத்தலும் எண்ணத் தக்கது. சிறு காக்கை பாடினியார் ‘தளை' என்பதோர் உறுப்பைக் கொண்டிலர் என்றும், குமரியாறு கடல் கொள்ளப்பட்ட காலத்தில் இருந்தவர் என்றும் (தொல். மரபு. 95) கூறுகிறார் பேராசிரியர்.

பாயிரம்

சிறுகாக்கை பாடினியார் கூறும்,


“வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத்
தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்
வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த
நாட்டியல் வழக்கம் நான்மையிற் கடைக்கண்
யாப்பின திலக்கணம் அறைகுவன் முறையே”

என்னும் தற்சிறப்புப் பாயிரத்தை எடுத்துக் கூறும் பேராசிரியர், காக்கை பாடினியார் போலத் தொல்காப்பியனார்க்குச் சிறுகாக்கை பாடினியார் ஒருசாலை மாணவர் அல்லர்; பிற்காலத்தவர் என்கிறார். இறையனார் களவியல் உரை கூறுவதுபோல் தமிழ் இலக்கணம், எழுத்து சொல் பொருள் யாப்பு என நான்காக நடை பெற்ற நாளில் இவர் இருந்தவர் என்பது ‘நாட்டியல் வழக்கம் நான்மையிற் கடைக்கண் யாப்பின திலக்கணம்’ என்று இவர் கூறுமாற்றால் விளங்கும்.

இனமுறை

காக்கை பாடினியார் விருத்தம் துறை தாழிசை எனப் பாவினங்களைக் கூறினார். சிறுகாக்கை பாடினியாரோ தாழிசை துறை விருத்தம் எனக் கொண்டார். இம்முறையே, தம் முறையாகக் கொண்டார் அமிதசாகரனார் என்று கூறுகிறார் யாப்பருங்கல விருத்தியுரைகாரர் (56.).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/237&oldid=1472856" இலிருந்து மீள்விக்கப்பட்டது