பக்கம்:இலக்கண வரலாறு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxiii

உரையாசிரியர்களைப் பற்றி இவர் கூறும் கருத்து, ஆய்வுத் திறனை வெளிப்படுத்துகிறது.

“பின்னவர் உரைகளால், முன்னவர் விளக்காத பகுதிகள் விளக்கம் பெறுவதும், சிக்கல்கள் அவிழ்க்கப்படுவதும் பட்டறிவால் ஏற்படுவன” (பக். 139).

சிவஞான முனிவரைப் பற்றிக் கூறும்போது, “(தொல்காப்பியம்) முழுமைக்கும் உரை எழுதும் நோக்கினர் அல்லர் இவர் என்பதை அதன் (சூத்திர விருத்தி) விரிவே காட்டுகின்றது”. (பக். 151) என்கிறார்.

இறையனார் அகப்பொருள் உரைபற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்:

“வாய் வழி நடந்து வந்த உரையெனின் இத்துணைப்பேர் வாய் மாற்றங்களில் எத்துணையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்!” (பக். 174).

புறப்பொருள் வெண்பாமாலையைப் பின்வருமாறு போற்றுகின்றார்:

“நூற்பாவும், நூற்பாவின் பொருள் விளக்கும் கொளுவும், அக்கொளுவுக்கு எடுத்துக் காட்டும் என முத்திறத்தானும் முந்நூல்போல் ஒரு நூலாகிய சிறப்பும் இந்நூற்கு உண்டு” (பக். 206).

உரைநெறி பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்:

“ஆசிரியர் இயற்றிய நூலுக்கு மாணவர் உரை எழுதும் மரபு நிலை உண்டே அன்றி, மாணவர் யாத்த நூலுக்கு ஆசிரியர் உரையெழுதும் வழக்கம் இல்லை.” (பக். 234).

நம்பி அகப்பொருள் இலக்கண நூலுக்கு, திருக்கோவையார் வழிகாட்டி இருக்கக்கூடும் என்று ஆசிரியர் கூறுவது, ஆய்வுத் திறனைப் புலப்படுத்தும் (பக். 315).

11. ஒப்பிட்டு ஆய்தல்

தண்டியலங்காரத்தின் தொடக்கத்தில் உள்ள நாமகள் துதியும், பன்னிருபடலத்தில் உள்ள நாமகள் துதியும் பெரிதும் ஒத்துள்ளன என்பதை ஆசிரியர் எடுத்துரைக்கின்றார் (பக். 330).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/24&oldid=1480820" இலிருந்து மீள்விக்கப்பட்டது