பக்கம்:இலக்கண வரலாறு.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

197


அடியின்றி நடப்பவை வாய்மொழி, பிசி, முதுசொல் என்னும் மூன்று என்றார் நற்றத்தனார். ஆனால் பல்காயனார் தொல்காப்பியர் கூறியவை கொண்டு, “அவைதாம், பாட்டுரை நூலே மந்திரம் பிசியே, முது சொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும், ஆக்கின என்ப அறிந்திசினோரே” என்கிறார் (யா. வி. 95). இவற்றால் பல்காயனார் பழமை புலப்படும்.

“இமிழ்கடல் வரைப்பின் எல்லையின் வழாஅத்
தமிழியல் வரைப்பில் தானினிது விளங்கி
யாப்பியல் தானே யாப்புற விரிப்பின்
எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோ
டிழுக்கா மரபின் இவற்றொடு பிறவும்
ஒழுக்கல் வேண்டும் உணர்ந்திசி னோரே”

என வரும் இவர் நூற்பா நூலின் தொடக்கத்ததாக இருத்தல் கூடும். இதனால் இவர் யாப்பிலக்கணமே கூறினார் என்பது விளங்கும் (யா. வி. 1).

“உயிரீ ராறே மெய்மூ வாறே
அம்மூ வாறும் உயிரோ டுயிர்ப்ப
இருநூற் றொருபத் தாறுயிர் மெய்யே”

என இவர் கணக்கிட்டுக் கூறுகிறார் (2). உயிர்மெய் இரட்டு நூற்றெட்டு என்னும் பின்னூலார்க்கு இவர் முன்னூலார் போலும்!

தனிக்குறில் சொல்லின் முதல் நின்று தனியசையாகக் கொள்ளப்படும் இடங்களை, “தற்சுட் டேவல் குறிப்பிவை அல்வழி முற்றத் தனிக்குறில் முதலசை ஆகா” என்று கூறி ஐயமறுக்கிறார் (யா. வி. 7).

எங்கோ இருக்கும் ஒரு நூற்பாவின், தொடரை எங்கோ கொண்டு வந்து இயைத்துப் பொருள் கூறுதல் சார்ச்சி வழி ஒழுகுதல் எனப்படும். இதனைப்பல்காயனார் முதலிய ஒருசார் ஆசிரியர் எடுத்து ஓதிற்றிலர் என்கிறார் யாப்பருங்கல விருத்தியுடையார் (23).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/242&oldid=1473203" இலிருந்து மீள்விக்கப்பட்டது