பக்கம்:இலக்கண வரலாறு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxiv


“தமிழ்நெறி விளக்க அகப்பொருட் பகுதிக்கும் பிற நூல்கள் வழியே அறியப்படும் அகப் பொருட் பகுதிக்கும் சில வேறுபாடுகள் உள” என்று கூறி அவ் வேறுபாடுகளை விளக்கியுள்ளார் (பக். 214).

தண்டியலங்காரம் கூறும் அணிகளின் பெயர்களை வீரசோழியம் கூறும் அணிகளோடு ஒப்பிட்டு ஆராயும் பகுதி சிறப்பாக உள்ளது (பக். 246, 247).

யாப்பருங்கலம், யாப்பருங் கலக்காரிகை ஆகிய இரண்டின் யாப்புக் கோட்பாடுகளை ஒப்பிட்டு நோக்கி வேறுபாடுகளைக் காட்டும் திறன், நூலாசிரியரின் ஆற்றலுக்குச் சான்று பகர்கிறது (பக். 231-233).

12. எதிர்ப்புக் குரல்

தமிழ் மரபுக்கு மாறான போலி நூல்களையும் உரைகளையும் கோட்பாடுகளையும் இந்த நூலின் ஆசிரியர் இனம் கண்டு, அவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை பாராட்டுதற்குரியதாகும்.

அகத்தியர் பெயரால் வழங்கும் போலிச் சூத்திரங்களையும் சில இலக்கண நூல்களையும் ஆசிரியர் விரிவாக ஆராய்ந்து அடையாளம் காட்டியுள்ளார் (பக். 30-33).

தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்குப் புலவர் குழந்தை எழுதியுள்ள உரையில் நூற்பாக்களை முன் பின்னாக மாற்றி அமைத்து, இயல்களை வேறுபடுத்தியுள்ளார். அவற்றை விரிவாக ஆராய்ந்து நூலாசிரியர்,

“இது உரைகாண்பார் மரபன்று. என்ன புதுமை எனினும் நூலைச் சிதறிக் கோலம் தெளிக்கும் உரிமை உரை காண்பார்க்கு இல்லை”

என்று கண்டிக்கின்றார் (பக், 160).

தமிழ் இலக்கண மரபுக்கு மாறான செய்திகளும் வடமொழி இலக்கண மரபைக் கொண்டு வந்து தமிழுடன் கலக்கும் முயற்சியும் வீரசோழியம், பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து ஆகிய மூன்று நூல்களிலும் மிகுதியாக உள்ளன.

இந்த நூலின் ஆசிரியர் அவற்றைக் கண்டிக்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/25&oldid=1480821" இலிருந்து மீள்விக்கப்பட்டது