பக்கம்:இலக்கண வரலாறு.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

“கவர்கணைச் சுற்றம் கவர்ந்த கணநிரை
அவரவர் வினைவயின் அறிந்தீந் தன்று“

வெண்பா

“ஒள்வாண் மலைந்தார்க்கும் ஒற்றாய்ந் துரைத்தார்க்கும்
புள் வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும்—விள்வாரை
மாறட்ட வென்றி மறவர்தம் சீறூரிற்
கூறிட்டார் கொண்ட நிரை”

“கைக்கிளை தானே வெண்பா ஆகி, ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே” என இலக்கணம் வருதலால், கைக்கிளைப் படலத்திற்கு எடுத்துக்காட்டு வெண்பா முன்னாக வந்து ஆசிரிய நிலையான் முடியும் மருட்பாவில் பாடினார்.

சிறப்பு

அகத்திணை ஏழாதல் போல், புறத்திணையும் ஏழே எனத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் வலியுறுத்தினர். அகங்கை ஏழு என்றால், புறங்கையும் ஏழே எனவும் எடுத்துக் காட்டினர். அதனால், தொகை நூல்களுக்குத் தொல்காப்பிய வழியிலேயே இலக்கணம் கூறினர். ‘புதுவன புகுதல்’ என்னும் காலவகையால் அமைந்த பன்னிருபடலத்தை முதனூலாகக் கொண்ட இந்நூல் புறப்பொருள் இலக்கண உலகில் தனிச்சிறப்புடையதாம். ஏனெனில் இதற்குப்பின் புறப்பொருள் கூறும் தனி இலக்கண நூல்கள் எவையும் தோற்ற முற்றில; ஐந்திலக்கணங் கூறவெழுந்த நூல்களும் இத்தகைய விரிவையும் சிறப்பையும் கொண்டில. இவை இவ்வெண்பாமாலையின் சிறப்புகள் எனலாம். இன்னொன்று; நூற்பாவும், நூற்பாவின் பொருள் விளக்கும் கொளுவும், அக்கொளுவுக்கு எடுத்துக்காட்டுமென முத்திறத்தானும் முந்நூல் போல் ஒரு நூலாகிய சிறப்பும் இந்நூற்கு உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/251&oldid=1473283" இலிருந்து மீள்விக்கப்பட்டது