பக்கம்:இலக்கண வரலாறு.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

ஒன்றும் துறைப்பாட்டுப் பதின்மூன்றும் முடிந்தன” எனப் பகுதிதோறும் பாடல் அனவை வரையறுத்துக் கூறுகிறார்.

சொல்லாட்சி

தண்டமிழ் தாவின்றுணர்ந்த என்பதற்கு, “குளிர்ந்த தமிழை வருத்தமின்றி யறிந்த” என எளிய இனிய உரை தருகின்றார். கற்பார், கற்பிப்பார் தகவை வெளிப்படுத்தும் உரை இது. ‘தமப்பன்’ என்னும் முன்மை ஆட்சியைக் கூறுகிறார்; தமக்கை, தமையன் என்பன போலத் தமப்பன் என்றிருந்த பழவழக்கே தகப்பன் ஆயிற்று என்பதை அறிந்து கொள்ளச் செய்கின்றார் (48). உறக்கமிடுதல் என்பது உயிர்போதலென நயமாகக் கூறுகிறார் (78). முனிவரன் என்பதற்கு ‘இருடிகளில் வரனாயுள்ளான்’ என்று இவர் உரை கூறுவது வரன் என்பதைப் பகுத்துரைத்த உரையாகும்.

‘வேந்தன் மனம்’ என்பதற்குக் குறிப்பு விளக்கமாக ‘வேந்தன் மனம் வெற்றியையே நினையும்’ என்று இவர் கூறுவது தெளிவுறுத்துகிறது.

தொல்காப்பியம், திருக்குறள் முதலியவற்றிலிருந்தும் மேற்கோள் காட்டியும் வரைகின்றார். ‘வேந்தனும் வேந்து கெடும்’ என்பதிலுள்ள வேந்து ‘இராச்சியம்’ என்கிறார் (68). அரிதாக இலக்கணக் குறிப்பு வரைகின்றார். ‘குருகு பெயர்க் குன்றம்’ என நூலாசிரியர் உரைத்திருப்பவும், இவர் தம் உரைக்கண் வடசொற்கள் பல பெய்தெழுதுதல் அக்கால நிலையைக் காட்டுகின்றது. சுருங்கிய உரை எனினும் அதனால் பெரிய பயனுண்டாதல் கற்பார் அறியக் கூடியதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/255&oldid=1473293" இலிருந்து மீள்விக்கப்பட்டது