பக்கம்:இலக்கண வரலாறு.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

213


ஆய பிரிவுகள் சேயிடைப்பிரிவு; பரத்தையிற் பிரிவு ஊரும் சேரியும் பிரியும் பிரிவாகலின் ஆயிடைப் பிரிவு.

முக்கட்கூட்டம்

இனி இவர் கற்பு என்பதை,

"முக்கட் கூட்டம் முதலா நான்கும்
தொக்கிய ஒழுக்கம் கற்பெனப் படுமே” (21)

என்கிறார். இதில் வரும் முக்கட்கூட்டம் என்பதன் ஆட்சி புதுமையது. இதனைக் களவியல் உரை, களவியல் காரிகை உரை, யா.வி.உரை ஆகியவை சுட்டுகின்றன. அவற்றில் ‘மக்கட் கூட்டம்’ என்ற பாடம் உண்மையையும் உ. வே. சா. குறிக்கிறார். “முக்கட்கூட்டம் இன்னதென்று இப்பொழுது விளங்கவில்லை. மக்கட் கூட்டம் என்று இருத்தல் கூடுமென்று ஊகிக்கச் செய்கின்றது. சூத்திரத்தை மட்டும் நோக்குகையில் முக்கட்கூட்டம் என்பதற்கு அறத்தொடு நிலை என்னும் பொருள் கொள்ளக் கிடக்கின்றது. இந்த ஐயமும் வேறு பிறவும் நாளடைவில் தெளிவாகுமென்று எண்ணுகிறேன்.” என்கிறார் (முகவுரை V, VI).

முக்கட்கூட்டம் என்பதே சரியான வடிவம். கண் இடப்பொருளது. முக்கண் மூவிடம். அம்மூவிடங்கள் இயற்கையால் கூடுமிடம், தோழியால் கூடுமிடம், தோழனாற் கூடுமிடம் என்பவை.

சொல்லாட்சி

ஓரிரு வேற்றுச் சொற்களையன்றிப் பிறசொற்கள் விரவாத தனித் தமிழ் தடையில் நூல் செல்கின்றது. பரப்பமைவாரி (3), கொழுங்கார் ஒழிபனி (4), பொருணிலை அந்தி (5) ஒருக்கினம் (ஆடு,ஆ, எருமை ஆகிய ஒன்றுபட்ட இனம்), முதுவாய்க் கட்டுவி (22) என அடைநயம்படத் தொடுப்பதும், இருணிலை, கவைநர், பழவர், கைத்தாய், அழப்பறை என அரிய இலக்கிய ஆட்சிகளை நயமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/258&oldid=1473297" இலிருந்து மீள்விக்கப்பட்டது