பக்கம்:இலக்கண வரலாறு.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

215

கோளாகவும் வந்துள. சங்கநூற் பாடல்கள் மிக அரிதாகவே ஆளப்பட்டுள்ளன. துறைக்குத் தக்க அளவில் அதன் பொருள் விளக்கமாக அமையுமாறே இம் மேற்கோள் பாடல்கள் இயற்றப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதுமாறு உள்ளன. அத்தகைய பாடல்கள் 173 உள்ளன.

“இனையல் வாழி பிரிவொன் றிலனே
நனைமலர் நறும்பூங் கோதை
அமையேன் நின்னையான் அகன்ற ஞான்றே”
(1)

இது பிரிவச்சம் என்பதற்கு எடுத்துக் காட்டு. இவ்வாறு உரிப்பொருளை விளக்குவதாக மூன்றடி அல்லது நான்கடி அளவாலேயே மேற்கோள்கள் அமைந்துள்ளன.

“தீயினும் வெய்ய என்குவை யாயின்
யாவதும் இனிய கானம்
சேயுயர் சிலம்பு நின்னொடு செலினே”
(90)

என்பது பட்டினப் பாலையில் வரும் அகப்பொருட் பிழிவெனத் தரும். சங்கப் பாடற் கருத்துகளை வாங்கிக் கொண்டு யாக்கப் பெற்றமை இவ்வாசிரியர் அகப்பொருட் புலமைப் பரப்பை நன்கு விளக்குகின்றது.

இந்நூல் முற்றாகக் கிடைத்திருந்தால் தமிழ்ப் பொருளியல் சிறப்புக்குத் தக்க சான்றாகத் திகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/260&oldid=1473299" இலிருந்து மீள்விக்கப்பட்டது