பக்கம்:இலக்கண வரலாறு.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

கலம்- காரிகை

அமித சாகரர் முதற்கண் யாப்பருங்கலத்தை இயற்றி அதன் பின்னரே யாப்பருங்கலக் காரிகையை இயற்றினார் என்பது “யாப்பருங்கலம் என்னும் யாப்பிற்கு அங்கமாய் அலங்காரம் உடைத்தாகச் செய்யப்பட்டமையான் யாப்பருங்கலக்காரிகை என்னும் பெயர்த்து” என வரும் குணசாகரர் உரையால் வெளிப்படும். அன்றியும் காரிகையை ‘யாப்பருங்கலப் புறநடை’ என யாப்பருங்கல விருத்தி குறிப்பதும் சான்றாம்.

நூல் அளவு

யாப்பருங்கலம் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என மூன்றியல்களையுடையது. முதலியலில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை கூறப்படுகின்றன. அடுத்த இயலில் நால்வகைப் பாக்களும் இனங்களும் பிறவும் கூறப்படுகின்றன. ஒழிபியலில் உள்ள நூற்பாக்கள் மூன்றே (94 - 96). அவை தனிச்சொல், புறநடை, சித்திரக்கவி முதலியவற்றைக் கூறுவன.

பாயிரமும் கடவுள் வணக்கமும் நீங்கலாக, யாப்பருங்கலத்தின் மொத்த நூற்பாக்கள் 96. அவற்றின் மொத்த அடிகள் 222. அனைத்தும் அளவடிகள்; தனிச்சொல் ஒன்று தானும் இல்லா நூற்பா அகவல் அடிகள்.

அசைக்கு உறுப்புகளை முதற்கண் கூறிய அளவானே (2) ஆய்தம் ஒற்று குறுக்கம் அளபெடை ஆகியவை பற்றிய சிறப்பு விதிக்குள் புகுகிறார் (3, 4). பின்னரே நேரசை நிரையசை முதலியவற்றைத் தொடங்குகிறார் (5). தளையை உறுப்பாகக் கொள்ளலும், இனம் கூறலும் காக்கை பாடினிய வழியில் மேற்கொள்கிறார். பொருள்கோள், வனப்பு, விகாரம், வண்ணம் முதலியவற்றைக் கூறுவதுடன் சொல்லணி, பொருளணி, சித்திரக்கவி ஆகிய அணி இலக்கணச் செய்திகள், பாட்டியற் செய்திகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/265&oldid=1473337" இலிருந்து மீள்விக்கப்பட்டது