பக்கம்:இலக்கண வரலாறு.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

221

ஆகியவற்றை ஒழிபியலில் சுட்டுகிறார். அவர் சுட்டுவனவற்றையெல்லாம் உறுப்பியல், செய்யுளியல்களில் விரித்துரைக்கும் விருத்தியுடையார், ஒழிபியலில் தமிழ்ப்பரப்பின் விரிவையெல்லாம் கூட்டுண்ணத் திரட்டி வைத்து விடுகிறார். 95, 96-ஆம் நூற்பாக்களுக்கு மட்டும் 205 பக்க அளவில் விரிவுரை எழுதப்பட்டுள்ளமை, அந்நாளில் செயற்கருஞ் செயலாகப் பாராட்டப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

“சொல்லிற் சுருங்கிப் பொருள்பெருகித் தொன்ஞானம்
எல்லாம் விளக்கி இருளகற்றும் — நல்யாப்(பு)
அருங்கலம் வல்லவர் தாமன்றோ கேள்வி
ஒருங்கறிய வல்லார் உணர்ந்து”

எனவரும் நூல் நிறைவு வெண்பாவினால் நூற் சுருக்கமும் உரைப்பெருக்கமும் ஒருங்குணர்த்தப்படுதல் அறியலாம்.

விருத்தியுரை

உரையாசிரியர்

யாப்பருங்கல விருத்தி என்னும் பெயருண்மையால், அவ்விருத்தியுரை ஆசிரியர் விருத்தியுடையார் எனப்படுகிறார் அவ்வளவே. இவர் பெயரையும் அறிந்துகொள்ள வாய்க்கவில்லை. காரிகை உரையாசிரியர் ஆகிய குணசாகரரே விருத்தியுரையாசிரியரும் ஆவர் என்று கருதுவாரும் உளர். இரண்டு நூல்களின் உரைகளிலும் உரையாசிரியர் எடுத்தாளும் இலக்கண மேற்கோட் சூத்திரங்களும் உதாரண இலக்கியங்களும் ஒற்றுமையுடையனவாக இருத்தலையும் உரைநடை பல இடங்களில் ஒன்றாகக் காணப்படுதலையும் இதற்குச் சான்றாகக் காட்டுவர் (யாப்பருங்கலக்காரிகை; உ. வே. சா. நூல் நிலைய வெளியீடு; உரையாசிரியர் வரலாறு).

இலக்கண நூல்களில் வரும் எடுத்துக்காட்டுகளும் மேற்கோள்களும் ஒன்றைத் தழுவி ஒன்று வருவது மரபு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/266&oldid=1473338" இலிருந்து மீள்விக்கப்பட்டது