பக்கம்:இலக்கண வரலாறு.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

தெரிந்த எடுத்துக்காட்டும் மேற்கோளும் பயில வழங்குமாயின் கற்பார்க்கு இலக்கணம் இடர்ப்பாடு இன்றிப் பதியும் என்பது உரையாசிரியர்கள் உட்கிடை. தொல்காப்பியம் நன்னூல் ஆயவற்றுக்குள்ள உரைகளை ஒப்பிட்டுக் கண்டால் இறந்தது விலக்கல், எதிரது போற்றல், தன்குறி வழக்கம் மிகவெடுத்துரைத்தல், விதப்புக் கிளவியால் வேண்டுவதுரைத்தல் இன்ன சில இடங்களில் சிலச்சில வேறுபாடுகளை யன்றி மற்றவை யெல்லாம் முந்தையுரை வழியே செல்வதாக அமையும். இதனைக் கொண்டு அவற்றின் பெயரறியார் உரையெல்லாம், பெயரறிந்தார் உரையெனக் கொள்ளல் கூடாமை வெளிப்படை.

“ஆரியம் என்னும் பாரிரும் பெளவம்” என்னும் தொடர் விருத்தியில் உள்ளவாறே, “ஆரியம் என்னும் பாரிரும் பௌவத்தைக் காரிகையாக்கி” எனக் காரிகை உரையில் வருதலால் இவ்விரண்டு உரைகளையும் கண்டார் ஒருவராக இருக்கக் கூடும் என்பதைக் குறிப்பர் (உரையாசிரியர்கள் 485). தலைமகனும் தலைமகளும் தமியராய் எதிர்ப்படும் காட்சியை, “கற்கந்தும் எறி போத்தும் கடுங்கண் யானையும் தறுகட் பன்றியும் கருவரையும் இரு நிலனும் பெருவிசும்பும் அனையார்” எனத் தொடங்கி இறையனார் களவியல் கூறுமாறே களவியற் காரிகை ஓரிருபக்க அளவு வேறுபாடறச் சொல்லிச் செல்கிறது. இவ்வொப்புமை கொண்டு மட்டும் ஈருரைகாரரும் ஓருரைகாரர் என்பதற்கு எத்தனை தடைகள் உள?

விருத்தியுரை காரராலும் காரிகை உரைகாரராலும் மேற்கோள் காட்டப் பெறும் இலக்கண ஆசிரியர்களுள் ஒருவர் மயேச்சுரர். அவர் பெயரைக் காரிகை ‘மயேச்சுரர்’ எனக் கூறுவதையன்றி எத்தகு அடை கூட்டியும் சொல்வதில்லை. ஆனால் விருத்தியுரையோ முற்றுறும் பற்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/267&oldid=1473339" இலிருந்து மீள்விக்கப்பட்டது