பக்கம்:இலக்கண வரலாறு.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

உரையாசிரியர் நுணுகியறித்து செயலாற்றியுள்ளார் என்க.

இலக்கணக் காரிகையாம் கட்டளைக் கலித்துறையை — எழுத்தெண்ணிப் பாடும் பாடலை — எடுத்துக் கொண்டு 44 காரிகைகளுள் 12 காரிகைகளைத் தலையாகு எதுகை அமையப் பாடியுள்ளார் நூலாசிரியர் என்றால் எத்தகு இலக்கியத்திறம் இருந்தது என்பதும் புலனாகும். அவர் கொண்ட யாப்பையே நாமும் கொண்டு தம் குறிப்பால் அன்றிப் பிறவகையால் அறிந்து கொள்ள இயலாவண்ணம் அக்காரிகை யாப்பிலேயே முதனினைப்புப் பாடல்கள் பாடினார் உரையாசிரியர் என்றால் அவரும் நூலாசிரியராம் தகுதி சான்ற சான்றோர் என்பது தானே விளங்கும்.

உரையாசிரியர் பெயர் குணசாகரர் என்பது கொண்டும், யாப்பருங்கலச் சிறப்புப் பாயிரத்தில் அமிதசாகரரின் ஆசிரியர் குணசாகரர் என்று வருவது கொண்டும் அவரே இவர் எனக் கருதினாரும் உளர். ஆசிரியர் இயற்றிய நூலுக்கு மாணவர் உரையெழுதும் மரபுநிலை உண்டேயன்றி மாணவர் யாத்த நூலுக்கு ஆசிரியர் உரையெழுதும் வழக்கம் இல்லை. அன்றியும் “தனக்கு வரம்பாகிய தவத்தொடு புணர்த்த குணக்கடற் பெயரோன்” என்று அமிதசாகரரால் பாராட்டப் பெற்ற குணசாகரர், இந்நூல் யாவரால் செய்யப்பட்டதோ எனின் ஆரியம் என்னும் பாரிரும் பௌவத்தைக் காரிகை யாக்கித் தமிழ்ப்படுத்திய அருந்தவத்துப் பெருந்தன்மை அமிதசாகரர் என்றும் ஆசிரியராற் செய்யப்பட்டது” என்று எழுதினார் என்பது பொருந்துவதாக இல்லை. அமிதசாகரர்மேல் அளவற்ற அன்பும் அவர் தம் புலமையையும் தவநெறியையும் உச்சிமேற் கொண்டு ஒழுகுதலு முடையவராய் அவர்க்குப் பின்வந்த குணசாகரர் என்னும் ஒருவரால் இயற்றப் பெற்றது காரிகை உரை என்பதே தகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/279&oldid=1473811" இலிருந்து மீள்விக்கப்பட்டது