பக்கம்:இலக்கண வரலாறு.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

243


நூல்நிலை

"திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்”

என்பது கந்த புராணத் தொடக்கப் பாடல். திகட சக்கரம் என்பதன் சொற்பிரிப்பு, திகழ் தசம் கரம் என்பதாம். திகழ் + தசம் ‘திகடசம்’; இவ்வாறு புணரும் புணர்ச்சியைக் கந்தபுராண அரங்கேற்றத்தின் போது புலவர்கள் மறுத்தாராக, கச்சியப்பர் வீரசோழியத்தில், “ஐம்மூன்ற தாமுடல் வன்மையின் வந்திடில் ஆறொடைந் தாம்” (18) என்பது கொண்டு நிலைநாட்டினார் என்பர். “ழகார ஒற்றீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர் வருமொழி முதல் வல்லினம் வந்து புணர்ந்தால், அந்த நகரமானது ணகரமும் டகரமுமாம்” என்பது பெருந்தேவனார் உரை.

தனிச்செய்தி

வேறு நூல்களில் கூறப்படாத இலக்கணங்கள் சில இந்நூலில் கூறப்பட்டதுண்டு. அவை:

ழகர மெய்யானது ளகர மெய்போல வல்லெழுத்துவரின் டகர மெய்யாகவும் மெல்லெழுத்துவரின் ணகர மெய்யாகவும் திரியும்.

குறில் செறியாத ழகரமெய், குறில் செறியாத ளகரமெய் போலத் தகர நகரங்கள் வரின் கெடும்.

ழகர மெய்யின் முன் வரும் நகர தகரங்கள், ளகர மெய்யின் முன் திரிதல் போல் முறையே ணகரமாகவும் டகரமாகவும் திரியும்.

இ, ஈ, ஐ என்னும் உயிர்களுக்குமுன் நகரம் ஞகரமாகத் திரியும். இன்னவை குறிப்பிடத் தக்கவை.

புகழ்ச்சி, இகழ்ச்சி, திகழ்ச்சி என்பவை புகட்சி, இகட்சி, திகட்சி என இவரால் கொள்ளப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/288&oldid=1473819" இலிருந்து மீள்விக்கப்பட்டது