பக்கம்:இலக்கண வரலாறு.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

255


சமயம்

இந்திர காளியம் எனப்படும் பாட்டியலின் நூலாசிரியர் சமண சமயத்தர் என்பது தெளிவு. வச்சணந்தி மாலையாம் வெண்பாப் பாட்டியலுக்கு முதனூலாததும் இதனை வலியுறுத்தும்.

பொருள்

வருணம், கதி, உண்டி, கன்னல், கணம், நாள், மங்கலம், ஆனந்தம், பிள்ளைப் பாட்டு, குடை மங்கலம், பொருத்தம், ஓலை இலக்கணம் ஆகியவை பற்றிய நூற்பாக்கள் உண்மை இத்தொகுப்பால் அறிய வருகின்றன.

ஓலை இலக்கணம் பற்றி இரண்டு பாடல்கள் நவநீதப் பாட்டியல் வழி அறியப்படுகின்றன (92). ஒன்று அகவல், மற்றொன்று வெண்பா. ஒரே செய்தியை இருவகைப் பாக்களில் சொல்ல வேண்டியதில்லை. அன்றியும் இந்திர காளியம் அகவல் நடையது; வெண்பாவின் இறுதியில் கல்லாடனார் வெண்பா என்னும் குறிப்பும் உள்ளது. ஆதலால் அவ்வெண்பாவை இந்திர காளியார் பாவினின்று ஒதுக்க வேண்டும். அப்பாடல்கள் நவநீதப் பாட்டியலில் உள்ளபடி: (உரை ii) இந்திர காளியனார் உரைத்தபடி:

“ஓலைய திலக்கணம் உரைக்கும் காலை
நாலாறு விரற்றானம் நான்மறை யோர்க்குப்
பார்த்திபர் தமக்குப் பதிற்றிரட்டி விரலே
வணிகர்க் கெண்ணிரு விரலே
சூத்திரர்க் கீராறு விரலே
இப்பரி சேபாட் டெழுதவும் படுமே”

“அந்தணர்க்கு நாலா லரசர்க் கிருபதாம்
இந்த விரல்வணிகர்க் கெண்ணிரண்டாம் — முந்துவிரல்
வேளாளர்க் கீராறாம் வெள்ளோலை வேயனைய
தோளாய் அறிக தொகுத்து”

- கல்லாடனார் வெண்பா.

எழுத்துக்கும் வருணம்! ஓலைக்கும் வருணம். வருணக் கொடுமை கொடி கட்டிப் பறந்த சான்றுகள் இன்னவை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/300&oldid=1473902" இலிருந்து மீள்விக்கப்பட்டது