பக்கம்:இலக்கண வரலாறு.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14. நேமிநாதம்


குணவீர பண்டிதர் என்பவரால் செய்யப்பட்ட இலக்கண நூல் நேமிநாதம் ஆகும். நேமிநாதர் என்பவர் சமண சமயத் தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் இருபத்து இரண்டாம் தீர்த்தங்கரராக விளங்கியவர். அவர்தம் பெயரால் செய்யப்பட்டமையால் இப்பெயர் பெற்றது.

பெயர்

இந்நூல் செய்தார் பெயர், நூலின் பெயர் ஆகியவற்றைப் பாயிரவுரை கூறுகின்றது: "இந்நூல் செய்தார் யாரோ எனின், உளமலி பேரருள் உயிர்மிசை வைத்த, வளமலி களந்தை வச்சணந்தி முனிவரன் கொள்கையின் வழாஅக் குணவீரபண்டிதன் செய்தமைத்தான்."

"இந்நூல் என்ன பெயர்த்தோ எனின், இந்நூல். எய்திய சிறப்பின் எழுத்தையும் சொல்லையும், மெய்தெரி வகையின் விளங்க நாடி, தேனிமிர் பைம்பொழில் தென் மயிலாபுரி, நீனிறக் கடவுள் நேமிநாதர் தந்திருப் பெயரால் செய்தமையான் நேமிநாதம் என்னும் பெயர்த்து" என்பவவை அவை.

இக்குணவீர பண்டிதர் செய்த மற்றொரு நூல் வெண்பாப் பாட்டியல். அதில் "கற்றவர் புகழும் களந்தையென் பெரும்பதி, குற்றமில் வாய்மைக் குணவீர பண்டிதர்" எனப்படுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/301&oldid=1465257" இலிருந்து மீள்விக்கப்பட்டது