பக்கம்:இலக்கண வரலாறு.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

குலோத்துங்கன் முதற்குலோத்துங்கன் என்பாரும் உளர். அவ்வாறாயின் கி.பி. 985—1014 ஆகும்.

சின்னூல்

நேமிநாதத்திற்கு ஒரு பெயர் சின்னூல் என்பது. இஃது அளவையால் பெற்ற பெயர். ‘சின்னூல் உரைத்த குணவீர பண்டிதன்’ என்று தொண்டை மண்டல சதகம் கூறுவதால் அப்பெயரும் நேமிநாதம் போலவே வழக்குடைய பெயராகக் கொள்ளலாம். “விரித்துரைத்த நூல்களிலும் வேண்டுவ கொண்டு, தெரித்துரைப்பன்” எனச் சொல்லதிகாரத்தில் வரும் செய்தியால் சுருக்க நூல் என்பது கொண்டு சின்னூல் எனப்பட்டது என்பதைத் தெளியலாம். மேலும், “விரிந்த நூல் உணரா மேதினியோர்க்குச் சுருங்கச் செய்தான், அந்நூல் தெரிவது காரணமாக” என வரும் பாயிர உரையும் தெளிவிக்கும் (1).

நூல்

நேமிநாதம் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் என ஈரதிகாரங்களை உடையது. எழுத்ததிகாரம் எனப் பெயர் இருப்பினும் அவ்வதிகாரமே இயலாக அமைந்து விடுகின்றது. சொல்லதிகாரம் மொழியாக்க மரபு, வேற்றுமை மரபு, உருபு மயங்கியல், விளிமரபு, பெயர் மரபு, வினைமரபு, இடைச்சொன்மரபு, உரிச்சொன் மரபு, எச்சமரபு என ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவ்வொன்பதும் தொல்காப்பியச் சொல்லதிகார இயல்களின் எண்ணிக்கை அளவை மட்டுமன்றிப் பெயரிலும் பெரிதும் ஒத்திருத்தல் கருதத்தக்கது. அன்றியும் எழுத்தில் இன்ன வழியால் நூல் செய்வேன் என்பதைக் கூறாத ஆசிரியர் சொல்லதிகாரத்தில்,

“தொல்காப்பியக் கடலிற் சொற்றீபச் சுற்றளக்கப்
பல்காற்கொண் டோடும் படகென்ப-பல்கோட்டுக்
கோமிகா மற்புலனை வெல்லும் குணவீர
நேமிநா தத்தின் நெறி”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/303&oldid=1474224" இலிருந்து மீள்விக்கப்பட்டது