பக்கம்:இலக்கண வரலாறு.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

262

சென்று கைப்பற்றி எந்தை வருக எம்மான் வருக மைந்தன் வருக மணாளன் வருக என்றால் வழுவாகற் பாலதோ எனின், அறியாது சொன்னாய் ஒரு பொருண்மேற் பல பெயர் அல்லாமையால் ஆகாது” (37).

சொற்றொடரமைதி பொருளொடு பொருந்தி நிற்றல் வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுத் தந்து நிறுவுகிறார்:

“வல்லம் எறிந்த நல்லிளங்கோசர் மகன் பெருவழுதி என்றால் வல்லம் எறிதல் பெருவழுதிமேற் செல்லாமையின் நல்லிளங் கோசரை இடைநிறுவற்க” என்பது அது. நல்லிளங்கோசர் மகன் வல்லம் எறிந்த பெருவழுதி என அமையின் வல்லம் எறிந்தவன் வழுதியாதல் தெளிவாம் (70).

விற்பயிற்சி செய்யுமிடம் ‘கல்லூரி’ என வழங்கப் பெற்றமை இவருரையால் அறிய வருகின்றது. “யாம் பண்டு வில்லெய்யும் இக்கல்லூரி” என்பது அது.

தாமே தடைவிடை எழுப்பிக்கொண்டும் விடையளிக்கிறார். முற்கு, வீளை என்பன ஒலியுடையன எனினும் இலக்கணச் சொல்லாகா என்கிறார். இதனைக் கூறும் இடத்து, “கைகாட்டல், தலையாட்டல் முதலாயின ஆராயாதே முற்கும் வீளையும் ஆராய வேண்டியது என்னை? இவை எழுத்துப்பிறக்கும் தானம் ஆதலாற் கிளவி எனவும் ஆராய வேண்டிற்று; அவை எழுத்து அன்மையிற் சொல்ல முடிந்தன இல்லை” என்கிறார் (95).

அமித சாகரர் (64) அவிநயனார் (128) அணியியல் (4, 20) இன்ன சில சிறப்புப் பெயர்களை ஆள்கிறார். ‘வேளாண்காணி’ எனப் பண்டை உரையாசிரியர்களால் வழங்கப்பட்டது இவர் காலத்தில் ‘வெள்ளாளர் காணி’ என வழங்கப்பட்டமை அறிய வருகின்றது (47).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/307&oldid=1474230" இலிருந்து மீள்விக்கப்பட்டது