பக்கம்:இலக்கண வரலாறு.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

271 காலத்தை உறுதி செய்யலாம் எனின், நூலாசிரியரே எடுத்துக்காட்டும் பாடியவர் என்பது தெளிவாகின்றது.

பிரயோக விவேக நூலார், “தண்டியாசிரியர் மூலோதாரணமுங் காட்டினாற் போல யாமும் உரையெழுதிய தல்லது மூலோதாரணமும் காட்டினாம்” என்று எழுதியிருத்தலால் தண்டியாசிரியரே மூலமும் எடுத்துக் காட்டும் இயற்றினார் என்பது விளங்கும்.

தண்டியாசிரியர் மிகுதியான எடுத்துக்காட்டுப் பாடல்களில் சிவபெருமானைப் பற்றிப் பாடியிருப்பதும், அவற்றுள் ‘எங்கோன்’, ‘அடியேற்கினிதாம் கச்சிக் கச்சாலைக்கனி’, ‘எம்பிரான்’ என இன்னவாறு உரிமை தோன்றக் கூறியிருப்பதும் இவர்தம் சைவசமயச் சார்பைக் காட்டும் என்பர். தற்சிறப்புப் பாயிரத்திலும், பொருளணியியல் காப்புப் பாடலிலும் இவர் கலைமகளை உளங்கொள வாழ்த்துகின்றார். ஒட்டக்கூத்தரைப் போல் இவரும் கலைமகள் வழிபாட்டில் ஈடுபட்டவர் என்பது விளங்குகின்றது. “என்னையுடையாள் கலைமடந்தை” எனவரும் பாட்டு சீரிய எடுத்துக் காட்டாக இலங்குகின்றது.

நூல்

தண்டியலங்காரம் பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்றியல்களையுடையது. நூற்பா யாப்பினைக் கொண்டது. தற்சிறப்பும் காப்பும் நீங்க மூன்றியல்களிலும் 125 நூற்பாக்களையுடையது.

பொதுவணியியலில் செய்யுள் வகை, அவற்றின் இலக்கணம், வைதருப்ப கௌட நெறிகள் ஆகியவை சொல்லப்பட்டுள்ளன.

பொருளணியியலில் தன்மையணி முதல் பாவிக அணி இறுதியாக முப்பத்தைந்து அணிகளின் இலக்கணமும் கூறப்பட்டுள்ளன. அவற்றின் வகைகளும் அவ்வப் பகுதியிலேயே சொல்லப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/316&oldid=1474240" இலிருந்து மீள்விக்கப்பட்டது