பக்கம்:இலக்கண வரலாறு.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

சொல்லணியியலில் மடக்கின் வகைகள், அவற்றின் இலக்கணம், சித்திரக் கவிகளின் இலக்கணம் வழுக்கள் வழுவமைதிகள் மலைவுகள் ஆகியவை சொல்லப்படுகின்றன.

நூற்செலவு

எடுத்த இலக்கணத்தைத் தொகுத்துரைத்துப் பின்னர் விரித்துரைத்துச் செல்லும் வழக்கினை நூல் நெடுகிலும் மேற்கொண்டுளார். பழைய பாடல்களை எடுத்தாளுதல், புதுப்பாடல்களை இயற்றிச் சேர்த்தல், மூல நூற் செய்தியை மொழியாக்கம் செய்து பாவடிவில் தருதல் என்னும் மூன்று வகைகளிலும் எடுத்துக் காட்டுகளைத் தருகிறார்.

நூற்பாவும், மொழியாக்கப் பாடல்களும் மொழி பெயர்ப்பென்னும் எண்ணத்தையுண்டாக்கா வண்ணம் சுவையும் நயமும் உடையனவாக விளங்குகின்றன.

“ஒங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் — ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னேர் இலாத தமிழ்”

என்னும் பாட்டு (49). செந்தமிழைச் செங்கதிருடன் ஒப்பிட்டுக் காட்டிப் பொருள் வேற்றுமைக்கு எடுத்துக்காட்டாகச் செய்த அருமை இவர்தம் தமிழன்பை நன்கு வெளிப்படுத்தும். அதே சுடரை அநபாயனுக்கு ஒப்பாக்கிக் கொண்டு மறுபொருளுவமையாகப் பாடுவது இவர்தம் நன்றிப் பெருக்கை நாட்டுவதாம்.

“அன்னை போல் எவ்வுயிரும் தாங்கும் அநபாயா!
நின்னையார் ஒப்பார் நிலவேந்தர்—அன்னதே
வாரிபுடைசூழ்ந்த வையகத்திற் கில்லையால்
சூரியனே போலுஞ் சுடர்”

என்பது அது. (31)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/317&oldid=1474241" இலிருந்து மீள்விக்கப்பட்டது