பக்கம்:இலக்கண வரலாறு.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

உரைக்கப்பட்ட இலக்கணம் அனைத்தும் தொகுத்து இவ்வாறன்றிப் பிறவாறு வருவன உளவெனினும் தழீஇக் கொள்க எனப் புறனடை உணர்த்துதல்” என்கிறது. இதனால் நூற் பொருளும் வைப்பு முறையும் காக்கப்பட்டமை புலப்படுகின்றது.
தண்டியலங்காரத்திற்குப் பழைய உரை யொன்றுண்டு. அவ்வுரை சுப்பிரமணியதேசிகர் உரை என்பர். அத்தேசிகர் திருவாவடுதுறைத் திருமடத்தின் 14-ஆம் பட்டத்தில் இருந்தவர் என்றும் கூறுவர். ஆனால் “தண்டியலங்கார உரை அனபாய சோழன் காலத்தில் இயற்றப்பட்டது என்பது அந்நூலின் உரையில் உள்ள மேற்கோள்களால் தெரியவருகின்றது. அந்நூலுரையாசிரியர் பெயர் விளங்கவில்லை” என்கிறார் உ.வே.சா.
நூற்பாவும் எடுத்துக்காட்டும் நூலாசிரியர் செய்ததாக அறியப்பட்டமையால் உரை விளக்கம் காட்டுதல் அளவே உரையாசிரியர் பணியாக இருந்தது. அவ்வெடுத்துக்காட்டுகளை உரையாசிரியர் பாடாமையால் வேறு தக்க காரணங்கள் இருந்தால் அன்றி அவர் பெயரை விலக்குதற்கு இடமில்லையாம்.
அணியியல்
அணியினது இலக்கணம் உணர்த்தினமையின் (இந்நூல்) அணியதிகாரம் என்னும் பெயர்த்து எனத் தற்சிறப்புப்பாயிரத்தில் வரும் உரை கொண்டு தண்டியலங்காரத்திற்கு அப்படி ஒரு பெயர் உண்டு என்று அறியலாம். ‘அணியியல்’ என்றோர் இலக்கண நூலுண்மை சிலப்பதிகார உரை, யாப்பருங்கல விருத்தியுரை, நேமிநாதவுரை, மாறனலங்கார உரை ஆகியவற்றால் அறிய முடிகின்றது. அந்நூற்பாக்கள் சிலவற்றைத் தம் நூலில் முன்னோர் மொழியாக மேற்கொண்டவர் நூலாசிரியர் என்பது உரையாசிரியர் சுட்டும் இப்பெயர்க் குறிப்பால் எண்ணத் தோன்றுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/319&oldid=1474243" இலிருந்து மீள்விக்கப்பட்டது