பக்கம்:இலக்கண வரலாறு.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

279

பவணந்தியார் இயற்றினார் எனவரும் செய்தியால், ஒருக்கால் ஐந்திலக்கணமும் கொண்டதாக நன்னூல் இருந்திருக்கக் கூடும் எனக் கருதலாம். பிறசில குறிப்புகளும் அவ்வாறு கருதுதற்கு இடந்தருகின்றன. எனினும் எழுத்து, சொல் என்னும் இரண்டன் இலக்கணமே நன்னூலில் கிடைத்துள்ளது. பாயிரந் தொடங்கி நூன் முற்றும் 462 நூற்பாக்களைக் கொண்டுள்ளது. இதனை மேலே காண்பாம்.


பவணந்தி முனிவர்

நன்னூலை இயற்றிய ஆசிரியர் பவணந்தி முனிவர் என்பார். இவர், “பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள், பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி” எனச் சிறப்புப் பாயிரத்தில் பகரப்படுகின்றார். இவர் ஊர் ‘சனகை’ எனப்படும் ‘சனகாபுரம்’ என்றும், இவர் தந்தை ‘சன்மதி முனிவர்’ என்றும் இப்பகுதியால் அறியலாம்.


சனகை

சனகை என்பதைச் சனநாதபுரம் என்றார் நன்னூல் முதல் உரைகாரராகிய மயிலைநாதர். அவர் உரையில் பாடமாக சனநாகபுரம், சனகாபுரம் என்பனவும் உள.

பவணந்தியாரின் சனகை தொண்டைமண்டலத்தைச் சார்த்தது என்கிறது தொண்டை மண்டல சதகம். அது கொங்கு மண்டலம் சார்ந்தது என்கிறது கொங்கு மண்டல சதகம். இவை தத்தம் மண்டலம் சார்ந்த ஊர்களாகக் காட்டுவது கற்பாரை மயக்குதற்காகவா? இல்லை. இரு மண்டலங்களிலும் சனகை என்னும் பெயர் சார்ந்த ஊர்கள் இருப்பதால் அவற்றைக் கொண்டு தத்தம் மண்டலம் சேர்ந்ததாகக் குறித்தன. பவணந்தியார் காலத்திற்கும் சதகங்களின் காலத்திற்கும் இருந்த கால இடைவெளி வரலாற்றுத் தடத்தை மறைப்பித்துப் பெயரொற்றுமை கொண்டு பாடத் தூண்டியது என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/324&oldid=1474248" இலிருந்து மீள்விக்கப்பட்டது