பக்கம்:இலக்கண வரலாறு.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

தொண்டை மண்டலம், அரக்கோணம் வட்டம், சோழசிங்கபுரத்திற்கு அண்மையில் ‘சனகாபுரம்’ என்னும் பெயருடையதோர் ஊர் உள்ளது. அன்றியும் இதனைச் சார்ந்த திருவல்லம் சிவன் கோயிற்கு அருகில் உள்ள வள்ளிமலைக் குகையில் தேவசேன பட்டாரர் என்பார் படிவம் ஒன்றுளது. அதன்கீழ் “ஸ்வஸ்திஸ்ரீ பாணராயர் குருகளப்ப பவணந்தி பட்டாரர் சிஷ்யரப்ப தேவஸேன பட்டாரர் பிரதிமா” (E.I.Vol-iv. 142) என்னும் கல்வெட்டுள்ளது. இதில் பவணந்தி பட்டாரர் என்னும் பெயரிருப்பதாலும் சனகாபுரம் என்னும் ஊர் ஆங்கு இருப்பதாலும் இவ்வூரே பவணந்தியார் ஊர் என்பர்.

கொங்குமண்டலத்தின் இருபத்துநான்கு பகுதிகளுள் குறும்புநாடு என்பதொன்று. அதில் ‘சீனாபுரம்’ என்றோர் ஊர், அப்பெயராலேயே, இன்றும் வழங்கப்படுகின்றது. ஆங்கு ஆதிநாதர் கோயிலும் உள்ளது. ஆதலால் அவ்வூரே பவணந்தியார் ஊர் ஆகலாம் என்பர்.

இனிப் பவணந்தியாரின் அன்புக்கும் அரவணைப்புக்கும் இடமாக இருந்தவன் சீயகங்கன். அவன் கங்க நாட்டினன். அந்நாட்டைச் சேர்ந்தவரே பவணந்தியார் என்பர். அதற்கு ஏற்ப, மைசூர் நாட்டுத் திருமுக்கூடல் நரசிபுரம் வட்டத்தைச் சேர்ந்ததும் காவிரியின் வட கரைக்கண் உள்ளதும் மாவிலங்கை என்னும் மற்றொரு பெயருடையதுமாகிய சனநாதபுரமே பவணந்தியாரின் ஊர் என்பர். இதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் பலவும், மயிலைநாதர் கூறுவதுபோல் சனநாதபுரம் என வழங்குதலும் சீயகங்கன் ஆட்சி செய்த பகுதியாக அஃதிருத்தலும் கொண்டு அதுவே பவணந்தியார் ஊர் எனலாம்.

சன்மதிமுனிவர்

‘சன்மதிமுனிவர் பவணந்தியாரின் தந்தையார் அல்லர்; ஆசிரியர்’ என்பாருமுளர். தொண்டைமண்டல சதகம் “சன்மதி மாமுனி தந்த மைந்தன் நன்னூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/325&oldid=1474249" இலிருந்து மீள்விக்கப்பட்டது