பக்கம்:இலக்கண வரலாறு.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

281

உரைத்த பவணந்தி மாமுனி” என்று தெளிவாகக் கூறுகின்றது. ஆகவே தந்தை என்பதே சரி என்பர். ஆனால் நன்னூல் பாயிரமோ, “சன்மதிமுனியருள் பன்னரும் சிறப்பிற் பவணந்தி” என்பதால் அறிவுத் தந்தை என்பதைத் திட்டவட்டமாக மறுத்தற்கு வேறு சான்றுகள் வேண்டத் தக்கனவே. சதகத்தார் காலம் நூலாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டது ஆகலான், அதனை முழுச் சான்றாகக் கொள்ளல் சாலாது.

சமயம்

பவணந்தியார் சமயம் சமணம் என்பது வெளிப்படை. ‘பவணநந்தி’ என்னும் பெயரே ‘பவணந்தி’யாகும். நந்தி என்பார் சமணர்களுள் மிகப் பலர் என்பது,

“கனகந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியும் குமணமா
சுனகநந்தியும் குனகநந்தியும் திவணநந்தியும் மொழிகொளா அனகநந்தியர்”

எனவரும் தேவாரத்தால் அறியலாம். ‘நந்தி’ என்பார் துறவோர் என்பதும் அறிந்த செய்தி. அத்துறவோர் மிகுதியாக வாழ்ந்த இடம் நந்திகிரி; அது இந்தாள் ‘நந்தி துர்க்கம்’ என வழங்கப்படுகிறது. இப்பகுதி கங்கவேந்தர்களின் தலைநகராகிய குவளாலபுரம் (கோலார்) சார்ந்தது என்பது அறியத் தக்கது.

இனிப் பவணந்தியார் எழுத்ததிகாரத் தொடக்கத்திலும், சொல்லதிகாரத் தொடக்கத்திலும் கூறும் கடவுள் வணக்கப் பாடல்களும், சிறப்புப் பாயிரத்தில் வரும் “முதல் ஈறு ஒப்பு அளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த அற்புத மூர்த்தி” என்னும் தொடரும் இவர்தம் சமண சமயச் சார்பை விளக்கும். “மொழிமுதற் காரணம் அணுத்திரள் ஒலி” என்பதும் (58) “வானவர் மக்கள் நரகர் விலங்குபுள், ஆதி செவியறிவோ டையறி வுயிரே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/326&oldid=1474251" இலிருந்து மீள்விக்கப்பட்டது