பக்கம்:இலக்கண வரலாறு.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

ராவர். அதனால் 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் இப்புலவர் என்க.


இவர் காலத்தைப் பதினேழாம் நூற்றாண்டு என்றும், இவர் தந்தையார்க்குப் பகதேவன் என்னும் பெயரும் உண்டு என்றும், இவர் நன்னூலின் முதல் இரண்டு இயல்களுக்கும் உரையறி நன்னூல் என்றும் ஆசிரிய விருத்தப்பாவான் அமைந்த உரையும் ஆசிரிய நிகண்டு என்னும் நூலும் செய்தார் என்றும் தமிழ்ப் புலவர் அகராதி கூறும்.


இ. சங்கர நமச்சிவாயருரை


மயிலை நாதருக்குப்பின் நன்னூலுக்குச் சிறந்த உரைகண்ட பெருமகனார் சங்கர நமச்சிவாயர். இவர் தம் உரைச் சிறப்பை உணர்ந்தே ‘தென்சொற் கடந்து வடசொற் கெல்லை தேர்ந்த’ சிவஞான முனிவரர் தாமே புத்துரை ஒன்று செய்யாது இவர் புத்துரைக்குமேல் வேண்டும் விளக்கம் வரைந்து புத்தம் புத்துரை கண்டார் என்பதனால் இவ்வுரைப் பெருமை விளங்கும்.


வரலாறு

சங்கர நமச்சிவாயர் ஊர் திருநெல்வேலி: தெரு தடி வீரையன் கோயில் தெரு; பாண்டி நாட்டு வேளாளராம் சைவக்குடியைச் சேர்ந்தவர். சங்கர நமச்சிவாய பிள்ளை என்றும் வழங்கப்பட்டார். இவர் மைந்தர் முத்துக்குமார பிள்ளை என்பார்.


நெல்லை ஈசானமடத்தில் இருந்த இலக்கணக்கொத்து ஆசிரியர் சாமிநாத தேசிகரிடம் தொல்காப்பியம், சங்க இலக்கியம், வடமொழி ஆகியவற்றை முறையே பயின்றவர். இவர் காலத்தில் இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகரும் திருநெல்வேலியில் இருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/339&oldid=1474273" இலிருந்து மீள்விக்கப்பட்டது