பக்கம்:இலக்கண வரலாறு.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

295


சாமிநாத தேசிகர் “சேற்று நிலத்திற் கவிழ்ந்த பால் தேன் நெய் முதலியனவும் சேறானாற் போல நன்னூற் சூத்திரமும் அவ்வுரையுடனே (மயிலை நாதருரையுடனே ) கலந்து குற்றப்பட்டது” என்னும் கருத்துடையவர். அதனால் நன்னூலுக்குச் சிறந்ததோர் உரை செய்யுமாறு சங்கர நமச்சிவாயரைப் பணித்தார். அதே பொழுதில்,

“பொன்மலை எனவிப் புவிபுகழ் பெருமை
மன்னிய ஊற்று மலைமரு தப்பன்
முத்தமிழ்ப் புலமையும் முறையர சுரிமையும்
இத்தலத் தெய்திய இறைமகன் ஆதலின்
நன்னூற் குரைநீ நவையறச் செய்து
பன்னூற் புலவர்முன் பகர்தியென் றியம்பினார்”

ஆதலால் புத்துரை கண்டார் சங்கர நமச்சிவாயர்.

சங்கர நமச்சிவாயர் ஊற்றுமலைச் சிற்றரசின் புலவர் தலைவராக விளங்கியவர் என்றும், அவர் நன்னூலுக்கு உரைகண்ட நாளில் மாதத்திற்கு நான்கு கோட்டை நெல்லும் (கோட்டை என்பது 96 படி) நாளுக்கு ஒரு படி பாலும் அரண்மனையில் இருந்து அவருக்குக் கொடுக்கப்பட்டு வந்தன என்றும், உரையரங்கேற்றத்தில் தக்க பரிசும், பாராட்டும் வழங்கப்பட்டன என்றும், பின்னர் நெல்லையை வாழ்விடமாகக் கொண்டார் என்றும் தாம் கேட்டதை உ. வே. சா. குறிப்பிடுவார்.

சங்கர நமச்சிவாயர் காலம் 17 ஆம் நாற்றாண்டு. திருவாவடுதுறை மடத்துச் சார்பு மிக்கவர். சைவ சமயம் சார்ந்தவர் என்பது வெளிப்படை. உரைப்பாயிரம்,

“எந் நூற்கும் எழுத்தொடுசொற் பொருளறிசங்
கரநமச்சி வாய என்னும்
பன்னூற்செந் தமிழ்ப்புலவன் சைவசிகா
மணிநெல்லைப் பதியி னானே”

என்பதறிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/340&oldid=1474276" இலிருந்து மீள்விக்கப்பட்டது