பக்கம்:இலக்கண வரலாறு.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

301


உலக மலையாமை யுள்ளிட்ட பத்தழகோடும் பிறந்து நின்றது இச்சூத்திரம்” என்பது நூலாசிரியர் மேல் கொண்ட பற்றுமையையும் மதிப்பையும் விளக்கும்.

உ. கூழங்கைத் தம்பிரான் உரை

பெயர்

நன்னூலுக்கு உரை கண்டவர்களுள் இவர் ஒருவர். இவர் உரை வெளிவந்திலது. இவர் காஞ்சியில் பிறத்தவர்; திருவாரூர் மடத்தில் சில காலம் தம்பிரானாக இருந்தவர். அக்காலையில் மடத்துத் தலைவர் இவர் மேல் சாட்டிய குற்றச்சாட்டு பொய் என்பதை மெய்ப்பிப்பதற்காகப் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைப் பிடித்தமையால் கை பழுதுற்றது. அதனால், கூழங்கையார் என்றும், கூழங்கைத் தம்பிரான் என்றும் வழங்கப்பட்டார் என்பர். சைவராகிய இவர்க்கு இந் நிகழ்ச்சி துயரைத் தந்ததுபோலும்! அதனால் கிறித்தவம் தழுவினார் என அறிய முடிகின்றது.

நூலாசிரியர்

இவர் ஈழநாடு சென்று வண்ணை வயித்தியலிங்கம் செட்டியார் உதவியால் யாழ்ப்பாணத்தில் குடியேறினார். தேவப்பிரசையின் திருக்கதை, யோசேப்புராணம் (1023 பாடல்கள்) என்பவை இயற்றினார்.

இயற்றமிழ் ஆசிரியர்

‘புலியூர் யமக அந்தாதி’, ‘யாழ்ப்பாண வைபவம்’ முதலிய நூல்களை இயற்றிய மயில் வாகனப் புலவர் (1779-1816), ஆறுமுக நாவலரின் தந்தையாராகிய கந்தப்பிள்ளை (1786 - 1842), இருபாலை நெல்லை முதலியார் முதலியோருக்கு இலக்கிய இலக்கணம் கற்பித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/346&oldid=1474284" இலிருந்து மீள்விக்கப்பட்டது