பக்கம்:இலக்கண வரலாறு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxxiv


கிளர்ந்தன, அவ்வாறே சான்றோர் கொண்ட மொழித் தேர்ச்சிக் கருத்துகளே, இலக்கண நூலாய் எழுந்தன. இக்குறிப்பை என்றும் போற்ற வேண்டும் என்றே,

“உலகம் என்ப துயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர்கட் டாக லான”

என முன்னை நூலோன் மொழிந்தனன் என்க,

இலக்கணம் என்பது முழுமை அல்லது பிண்டப் பெயர். அது கிளர்ந்து வளர்ந்த வரலாறு பெரிது. அதன் பரப்பும் — அழியாமல் காக்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை ஒரு பாதிதானும் இல்லையெனினும் — பெரும் பரப்பே! அப்பரப்பைக் கால வரிசையில் பார்ப்பது இலக்கண வரலாறு.

கால வரிசைப் பார்வை, தனிமாந்தர் வரலாற்று நிலையில் போக்குகளைத் தெளிவிக்க உதவும். அது போல் காலவரிசைச் சமுதாயப் பார்வை, ஓரினத்தின் வாழ்ச்சி வீழ்ச்சிக் களங்களைத் தெளிவிக்கும். இவ்வகைப் பார்வை இலக்கணத்திற்கும் பார்க்குங்கால், அதன் வளர்நிலை — தளர் நிலைகளும், செய்தக்கன, செய் தகாதன என்பனவும் தெளிவிக்கும்.

இயல், இசை, நாடகம் என முத்தமிழ்க்கும் இலக்கணம் ஒருமொத்தமாக இருந்தது என்பது உரைக் குறிப்புகளே. தனித்தனி இலக்கணம் இருந்தன என்பதற்கே சான்றுகள் உண்டு. இயற்கையும் அதுவே.

நரம்பின் மறையைச் சுட்டும் — தொல்காப்பியர் அதனை, அம்மறையில் கண்டு கொள்ள ஏவினாரே அன்றி விரித்தார் அல்லர். நுவல்வதும் பொருந்தாது எனக் கொண்டார் என்பது அந்நூற்பா நடையால் புலப்படுதலும் ஒருதலை.


“அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்”
.(தொல். 33)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/35&oldid=1471337" இலிருந்து மீள்விக்கப்பட்டது