பக்கம்:இலக்கண வரலாறு.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306


“அகர இகர மைகார மாகும்”
“அகர உகர மௌகார மாகும்”
“அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்”

எனக் கூறியதறிந்தும் (தொல். மொழி, 21-23), “அ ய் இ இந்த மூன்றுங்கூடி ஐகாரமாயிற்றெனவும், அ வ் உ இந்த மூன்றும் கூடி ஒளகாரமாயிற்றெனவும் பொருள் கூறுவாரும் உளர். அது போலி இலக்கணம் ஆகாமை உணர்க” என மறுக்கிறார்.

செய்யுட்குரிய பொருள்கோளைச் சொல்லிலக்கணத்தில் கூறுவானேன் என்று எண்ணும் இவர் (460),

“செய்யுளுக்குத் தொடர் என்று காரணப் பெயர் வந்தது மொழிகள் தொடர்ந்ததால் அன்றோ! அங்ஙனமாதலால் இதுவும் தொடர்மொழி இலக்கணமேயாம்” என்கிறார்.

உரைநிலை

ஒவ்வொரு நூற்பாவுக்கும் தலைப்பும், நூற்பாவும், நூற்பா இன்ன பொருள் உணர்த்திற்று என்னும் குறிப்பும், சொற்பொருளும் (பதவுரையும்) விளக்கமும் எடுத்துக் காட்டும் நூற்பாக்கிடக்கை முறை முடிப்பும் கூறுதலை இவர் முறையாகக் கொள்கிறார். தொல்காப்பியத்துடன் ஒப்பீடும், வடமொழிக் குறியீடு காட்டலும் இயன்றவிடத்தெல்லாம் மேற்கொள்கிறார். எடுத்துக்காட்டுகள் இயன்றவரை மிகுதியாகக் காட்டுகிறார். எளிமை, தெளிவு ஆகியவை இவர் மாணவர்க்குக் கற்பிக்கும் கடப்பாட்டினின்று உண்டாகிய பட்டறிவின் விளைவு எனலாம். இவர்க்குப் பின் வந்த உரைகள் இதனிலும் எளிமைப் படுவனவாயின.

பதிப்பு

இராமாநுசக் கவிராயருரை அவராலேயே 1845இல் முதற்பதிப்பாக வெளிவந்தது என்பார் உ. வே. சா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/351&oldid=1474289" இலிருந்து மீள்விக்கப்பட்டது